இலங்கை அரச இனவாதிகளிடமிருந்து உதயன் நாளேட்டுக்கு கொலை அச்சுறுத்தல்!!
-
இவ் விடயம் 28. 06. 2009, (சனி),
தமிழீழ நேரம் 5:15க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் ‘உதயன்’ நாளேட்டுக்கு எதிராக கடுமையான எச்சரிக்கைகளுடன் கூடிய துண்டுப்பிரசுரங்கள் குடாநாட்டில் நேற்று விநியோகிக்கப்பட்டுள்ளது. ‘உதயன்’ நாளேட்டு நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் இம்மாத இறுதியுடன் அந்த நிறுவனத்திலிருந்து வெளியேறிவிட வேண்டும் எனவும் இந்தத்துண்டுப் பிரசுரத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
குடாநாட்டில் இருந்து வெளிவரும் நாளாந்தப் பிரதிநிதிகள் வீதிகளில் வைத்து பலவந்தமாக எரிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்கு இடையில் இவ்வாறு கடுமையாக எச்சரிக்கும் துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப்பட்டிருப்பது ஊடகத்துறையினருக்குப் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
குடாநாட்டில் உள்ள நாளேட்டு விற்பனையாளர்களுக்கு நேற்று சனிக்கிழமை காலை விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்களில் ‘உதயன்’ நாளேடு தொடர்ந்தும் பயங்கரவாதத்துக்கே துணை போவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ‘நாட்டைக் காக்கும் தமிழர் கூட்டணி’ என்ற பெயரிலேயே இந்தப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்துக்கு ‘உதயன்’ நாளேடு தொடர்ந்தும் துணைபுரிவதால் அதனைப் புறக்கணிக்குமாறு மக்களிடம் கேட்டுள்ள இந்த அமைப்பு, ‘உதயன்’ நிறுவனத்தில் பணிபுரியும் அனைவரும் எதிர்வரும் 31 ஆம் நாளுக்கு முன்னதாக அதில் இருந்து வெளியேறிவிட வேண்டும் எனவும் எச்சரித்திருக்கின்றது.
நாடு கடந்த அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு விடுதலைப் புலிகள் மேற்கொண்டுள்ள முயற்சிகளைக் கண்டிக்கும் அறிக்கை ஒன்றை இந்த வார தொடக்கத்தில் இந்த அமைப்பு யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் நாளேடுகளுக்கு கொடுத்திருந்தது.
இருந்தபோதிலும் யாழ். நாளேடுகள் எதுவும் இதனைப் வெளியிடாததால் ஆத்திரமடைந்த இந்த அமைப்பினர் நாளேடுகளின் ஆசிரியர்களையும் கடுமையாக எச்சரித்திருந்தனர். அந்தப் பின்னணியிலேயே இரண்டு நாட்களுக்கு முன்னர் குடாநாட்டு ஏடுகளின் பிரதிகள் வீதிகளில் வைத்து எரிக்கப்பட்டன.
இப்போது அதே குறிப்பிட்ட அமைப்பினரால் ‘உதயன்’ நாளேட்டுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது குடாநாட்டு ஊடகத்துறை சார்ந்தவர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியிருக்கின்றது.
குடாநாட்டு ஏடுகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக ஆயுதக்குழு ஒன்று மேற்கொள்ளும் முயற்சியாகவே இதனைப் பார்க்க வேண்டியிருப்பதாகவும் குடாநாட்டு வட்டாரங்கள் தெரிவித்தன.
யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் ஆயுதக்குழுக்கள் ஊடகங்களை அச்சுறுத்த முற்பட்டிருப்பது சுதந்திரமான தேர்தலுக்கு வழிவகுப்பதாக அமையாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.