கருணாநிதியின் ஒற்றுமைப் புலம்பல் ஒரு பார்வை – புண்ணியன்

INDIA-ELECTION/என்ன விலை கொடுத்தேனும் ஈழத் தமிழரைக் காப்பேன் காப்பேன் என்றுதான் முதலில் துவங்கினார் கருணாநிதி. ஆனால் ஈழத் தமிழர் விவாகரத்தில் இது அவராக துவங்கி வைத்த போராட்டம் அல்ல.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஈழத் தமிழர்களுக்காக முதன் முதலாக ஒரு உண்ணாவிரதத்தை அறிவித்து நடத்திய பிறகுதான் அரசியல் கட்சிகள் இந்த பிரச்சனைக்குள் காலடி எடுத்து வைத்தது. கருணாநிதியும் இதை தவிர்க்க முடியாதோ என நினைத்து இதை விருப்பமில்லாமல் கையில் எடுத்தார்.

ஆரம்பத்தில் இது போன்ற ஒற்றுமை புலம்பல்கள் அவரால் போதிக்கப்பட்டன. பத்து நாட்களுக்குள் மத்திய அரசு தலையிட்டு போரை நிறுத்த வேண்டும் இல்லை என்றால் நாற்பது எம்,பிக்களும் ராஜிநாமா என்று சர்வக் கட்சிக் கூட்டத்தில் எடுத்த முடிவை தள்ளிப் போட்டார். பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.

கருணாநிதியைப் போலவே பதவியை விட்டு விலகத் தயாராக இல்லாத ராமதாசும் அமைதியாக இதை ஏற்றுக் கொண்டார். ஆனால் திமுக ராஜிநாமா கடிதங்களைக் கொடுத்தால் நாங்களும் கொடுப்போம் என்றார் ராமதாஸ். ஒரு நாடகமாக இதை எடுத்துச் செல்லலாம் என் நினைத்த கருணாநிதியோ உடனே ஒற்றுமை இல்லை என்றார். இந்த இருவருமே தங்களின் பதவிகளை இழக்க விரும்பவில்லை என்பதோடு இருவருமே மத்திய காங்கிரஸ் அரசை கண்டிக்க முன்வரவில்லை.   அந்த ராஜிநாமா நடகத்தை ஒட்டி சென்னைக்கு வந்த பிரணாப்முகர்ஜியை சந்தித்த பிறகு கருணாநிதி என்ன சொன்னார் தெரியுமா? நாற்பது நாள் போரை நான்கு நாட்களில் முடிவுக்கு கொண்டு வரமுடியாது என்று பிரணாப்முகர்ஜி சொன்னதை வழிமொழிந்தார்.

நீங்கள் ஏன் ராஜிநாமா செய்ய வில்லை என்று கேட்டதற்கு தமிழக கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை என்றார். அதாவது ஒற்றுமை இருந்தால் மட்டுமே இவர் எதையும் செய்வார் என்கிற நிலையில்  பேசுகிறார். உலகெங்கிலும் உள்ள பிராந்திய அரசுகள். அதிகாரத்தில் இல்லாத கட்சிகள் இவைகள் எல்லாம் ஒத்த கருத்தோடும் கொள்கை முடிவோடும்தான் எல்லா நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறதா? 1974‐ல் கருணாநிதியின் ஒப்புதலோடு மத்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்த போது தமிழக கட்சிகளின் முழு ஒப்புதலோடுமா? கொடுக்கப்பட்டது. சேதுக்கால்வாய் திட்டம் கொண்டுவரப்பட்டதற்கும் இப்போது பாதியில் நிற்பதற்கும் தமிழக கட்சிகளின் ஒற்றுமை இன்மையா? காரணம்.

சிலர் இப்படியும் சொல்கிறார்கள். மூன்று மனைவிகளையும் ஆறு பிள்ளைகளையும் பெற்ற குடும்பத்துக்குள்ளேயே ஒத்த கருத்தோ ஒற்றுமையோ இல்லையே? இன்றுவரை கனிமொழியை  மாறன் சகோதர்கள் ஏற்றுக் கொள்ளவில்லையே? உயிரோடு இருக்கும் இரண்டு மனைகளுக்கிடையிலேயே ஒற்றுமை இல்லையே? எப்படி முரண்பட்ட அரசியல் கோரிகைகளோடு செயல் படும் கட்சிகளுக்கிடியில் ஒற்றுமை வரும்? என்பதுதான் அந்தக் கேள்வி…

ஒற்றுமை இருந்தால் சாதிப்பாரா?

போருக்குப் பின், வணங்காமண், கச்சத்தீவு பிரச்சனைகள் இப்போது தமிழகத்தில் தலை தூக்கியிருகிறது. பருவமழை தாமதமாகிக் கொண்டிருக்கும் சூழுலில் வரும் மாதங்களில் காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்சனைகள் பூதாகரமாக வெடிக்கும் சுழலும் இருக்கிறது. இந்நிலையில் இவர் சொல்கிறார்.  ஈழத் தமிழர் விவாகரத்தில் நம்மால் எதையுமே செய்ய முடியாமல் போனதற்கு நம்மிடம் ஒற்றுமை இன்மையே காரணம் இனியாவது ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

கச்சத்தீவு, முல்லை அணை, காவிரி எல்லா பிரச்சனைகளிலும் உங்களை ஆதரிக்கிறோம். மத்திய அரசிடம் பேசி எல்லா உரிமைகளையும் பெற்றுக் கொடுங்கள் என்று தமிழகத்தின் எல்லாக் கட்சிகளும் இந்த மூத்த தலைவரை அணுகிறது என்று வைத்துக் கொள்வோம் கருணாநிதி உட்னே மத்திய அரசிடம் பேசி தமிழக உரிமைகள் எல்லாவற்றையும் பெற்றுவிடுவாரா? என்ன? அவருக்குத் தெரியும் தமிழக முதல்வராக இருந்தாலும் தன்னால் இந்த இனத்திற்கோ தமிழகத்துக்கோ தமிழ் ஈழத்திற்கோ எதையும் செய்யவும் முடியாது செய்கிற துணிச்சலும் தனக்கு கிடையாது என்பது அவருக்கு தெரியும்.

இதோ சட்டசபையில் தினம் தோறும் ஈழப்படுகொலைகள் குறித்து எதிர்கட்சிகள் விவாதிக்க நேரம் கோறுகின்றன. ஒரு வார்த்தை கூட அந்தப் படுகொலைகள் குறீத்து பேச அனுமதிக்கக் கூடாது என்று பிடிவாதமாக மறுக்கிறார் கருணாநிதி. மத்திய அரசின் மீதும் மாநில அரசின் மீதும் அபாண்டமான பொய்களைச் சொல்வதாக குற்றம் சுமத்திக் கொண்டே இருக்கிறார். ஆனால் ஈழத் தமிழர்களுக்காகச் செய்ததாக தன்னால் எழுதபப்ட்ட கடித எண்ணிக்கைகளை மட்டுமே அவரால் இன்று வரை காட்ட முடிகிறது. இதைத் தாண்டி அவர் மத்திய அரசுக்கு எந்த அழுத்தத்தையும் கொடுத்ததும் இல்லை கொடுக்கப் போவதும் இல்லை. தினம் தோறும் முள்ளிவாய்க்காலில் ஆயிரம் மக்கள் கொல்லப்பட்ட போது இவர்  மழை விட்டும் தூரல் விடவில்லை என்றால் அதாவது குறைவான மக்களே சாகிறார்கள் என்றார். எல்லாம் நடந்து முடிந்தது புலிகளின் கடற்படைத் தளபதி கருணாநிதியிடம் வைத்த கோரிக்கையைக் கூட உதாசீனப்படுத்திய இந்த மனிதர் , பிரபாகரனை போரஸ் மன்னனைப் போல நடத்த வேண்டும் என்று கூறிய இந்த மனிதர் பெரும் இன அழிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில் எதுவுமே நடவாதது போல நம்மிடம் ஒற்றுமை இல்லை என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்.

இந்திய மத்திய அரசு தமிழக மக்களை இழிவாக நினைக்கிறது என்றால் அது கருணாநிதியின் கையாலாகாத தனத்தால்தான் அதுதான் உண்மை. பெரியாருக்கும் அண்ணாவுக்கும் பிறகும் தமிழக மக்களை அடிமாடுகளாக மாற்றிய இந்த மனிதரைப் போல ஒரு நடிகரை தமிழக் அரசியல் இதுவரை கண்டதில்லை. அதுதான் உண்மை. மற்றபடி ஜெயலலிதா போன்ற மக்கள் மீது அக்கறையற்றவர்கள் இருக்கும் வரை சரியான எதிர்க்கட்சி ஒன்று உருவாகாத வரை கருணாநிதி மட்டுமல்ல அவர் உருவாக்கி வைத்திருக்கும் அரசியல் வாரிசுகளே இந்திய மத்திய அரசின் ஏவலாட்களாக இருந்து காலாகாலத்திற்கும் ஆட்சி புரிவார்கள்.

இவ்விடயம் பற்றிய உங்கள் கருத்தை எழுதுங்கள்

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.