வாயில் விரலை வைத்து சத்தம் போட வேண்டாம் என பணித்த பசில் : அடங்கிப்போன டக்ளஸ்

pasil-rajapaksaயாழ் மாநகர சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் முன்னணியும், துணைப்படை ஈ.பி.டி.பியும் இணைந்து போட்டியிடுகின்ற போதிலும், இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான உட்பூசல் நீடித்து வருகின்றது.

கடந்த வாரம் யாழ் செயலகத்தில், சிறீலங்காவின் அதிபரது சகோதரரும், ஆலோசகருமான பசில் ராஜபக்ச கலந்து கொண்ட கூட்டத்தில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தக் கூட்டத்தில் பலர் கலந்து கொண்டிருந்தபோது, சிலரை மட்டும் அணுகிய பசில் ராஜபக்ச, எதிர்வரும் யாழ் மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடுமாறும், தமது வெற்றிலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இதன்போது துணைப்படை ஈ.பி.டி.பி குழுவின் தலைவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா ஏதோ கூற முற்பட்டபோது, தனது வாயில் விரலை வைத்த பசில் ராஜபக்ச, அவரைப் பார்த்து சத்தம் போட வேண்டாம் என கோபத்துடன் சைகை செய்திருக்கின்றார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இறுகிய முகத்துடன், கூட்டம் நிறைவு பெறும்வரை டக்ளஸ் அமைதியாக இருந்ததுடன், அந்தக் கூட்டம் முடிவடைந்து அனைவரும் வெளியேறும்வரை யாருடனும் பேசவில்லை என அங்கிருந்த ஒருவர் கூறினார்.

தமிழ் மக்களின் உரிமைகளை சனநாயக வழியில் பெற்றெடுக்க இருப்பதாகக் கூறிவரும் ஆயுதம் தரித்துள்ள ஓட்டுக் குழுவினருக்கே பகிரங்கமாக நேர்ந்துள்ள இச்சம்பவம், எதிர்காலத்தில் தமிழ் மக்களின் நிலை என்ன என்பதற்கு சான்றாக அமைந்துள்ளதாக, அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட சிலர் தெரிவித்துள்ளனர்.

சிறீலங்கா அரசின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட ஈ.பி.டி.பி விருப்பம் இன்றி இருந்த போதிலும், அரசின் அச்சுறுத்தல், மற்றும் அழுத்தம் காரணமாகவும், வாக்கு மோசடியை இலகுவாக்கவும், இணைந்து போட்டியிடும் முடிவு இறுதி நேரத்தில் எடுக்கப்பட்டிருந்தது.

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.