யாழ்ப்பாணத்தில் ‘உதயன்’ பணியாளர்களுக்கு அச்சுறுத்தல்
-
இவ் விடயம் 29. 06. 2009, (செவ்வாய்),
தமிழீழ நேரம் 17:32க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
யாழ்ப்பாணத்தில் ‘உதயன்’ பத்திரிகையை இயங்க அனுமதிப்பதில்லை எனத் தெரிவித்து, ‘உதயன்’ பணியாளர்களை அச்சுறுத்தும் துண்டுப்பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
‘நாட்டைக் காக்கும் தமிழ்க் கூட்டமைப்பு’ என்ற அமைப்பின் பெயரால் யாழ். நகரில் உள்ள சில பத்திரிகை முகவர்களுக்கு இந்தத் துண்டுப் பிரசுரம் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
24 வருடங்களாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் நாளேடு ஒன்றுக்கு, யாழ்ப்பாணத்தில் மிக முக்கிய தேர்தல் ஒன்று நடைபெறவிருக்கையில், இப்படியானதோர் அச்சுறுத்தல் விடுக்கப்படுவது தேர்தல் சட்டமீறல் நடவடிக்கை எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.
பயங்கரவாதத்தை ஒழித்து, ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான சகல நடவடிக்கைகளையும் அரசு முன்னெடுத்திருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ள சூழலில் இப்படியொரு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பது விசனத்துக்குரியது எனக் கூறப்படுகின்றது.
நீண்டகாலம் இயங்கும் ஒரு பத்திரிகையை அச்சுறுத்தி சட்டவிரோத நடவடிக்கை மூலம் செயலிழக்கச் செய்யும் எத்தனத்தில் ஈடுபடும் அளவுக்கு ஒரு கட்டமைப்பு குடாநாட்டில் செயற்படுகின்றதா என்பது குறித்து அரசியல் கட்சிகள் பலவும் அதிருப்தியும், விசனமும் தெரிவித்திருக்கின்றன என்றும் கூறப்படுகின்றது.
இந்த விடயம் குறித்து அரசின் உயர் மட்டத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பல சர்வதேச நாடுகளின் தூதரகங்களும் ராஜதந்திர மட்டத்தில் இவ்விடயம் குறித்து விசாரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த அச்சுறுத்தல், பற்றிய தகவல் கிடைத்ததும் யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் நேற்று ‘உதயன்’ அலுவலகத்துக்கு நேரில் விஜயம் செய்தனர் என்றும் -
எந்த அசம்பாவிதங்களுக்கும் தாம் இடமளிக்க மாட்டோம் என ‘உதயன்’ நிர்வாகத்திடம் தெரிவித்த அவர்கள், இது குறித்து அரச உயர் மட்டத்தில் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.