அமெரிக்காவின் பயண எச்சரிக்கை அதிருப்தியளிக்கிறது: பாலித கோஹண
-
இவ் விடயம் 01. 07. 2009, (செவ்வாய்),
தமிழீழ நேரம் 4:25க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
இலங்கைக்கான விஜயங்கள் ஆபத்தாக அமையக் கூடும் என்ற அமெரிக்காவின் பயண எச்சரிக்கை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு விஜயம் செய்யும் அமெரிக்க பிரஜைகள் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும், தீவிரவாத தாக்குதல்கள் இடம்பெறக் கூடும் எனவும் அமெரிக்கா தனது புதிய பயண எச்சரிக்கையில் தெரிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றாக தோற்கடிக்கப்பட்டுள்ளனர் என்ற யதார்த்தத்தை புறந்தள்ளி அமெரிக்கா நடவடிக்கை மேற்கொள்வதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோஹண தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பாதுகாப்பு சூழ்நிலை குறித்து அமெரிக்கா சரியாக புரிந்துகொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும், இலங்கைக்கான பயணங்களை மேற்கொள்வதில் எவ்வித ஆபத்தும் இல்லை என பாலித கொஹணே சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் வெற்றிபெற்றதாக அறிவித்திருந்த போதும் இலங்கைக்குப் பயணிக்கும் தமது சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்தின் ஏற்பாடுகள் போதுமானதாக அமையவில்லை என தெரிவித்து அமெரிக்க ராஜாங்க திணைக்களம் பயண எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.