அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இனவாதிகளை விரட்டுமாறு இந்தியா உத்தரவு – விக்ரமபாகு
-
இவ் விடயம் 03. 07. 2009, (சனி),
தமிழீழ நேரம் 16:34க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இனவாதிகளை அதில் இருந்து விரட்டிவிடுமாறு இந்தியா தெரிவித்துள்ளதாக கலாநிதி. விக்ரமபாகு கருணாரட்ன குறிப்பிட்டுள்ளார். யுத்த வெற்றியை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, தேசியக் கொடியை அரசாங்கத்தின் கொடியாக மாற்றிக் கொண்டு, மன்னருக்கு (ஜனாதிபதிக்கு) தங்கம், வெள்ளி என அணிவித்து, பெரும் ஆட்டத்தை ஆடி வருகின்றனர். எனினும் கூரை தம் தலையில் இடிந்து விழப் போகிறது என்பதை இவர்கள் அறியவில்லை எனவும் விக்ரமபாகு சுட்டிக்காட்டியுள்ளார்.
உலகமே பொருளாதார நெருக்கடிகளை சந்தித்துள்ள வேளையில், இலங்கை போன்ற நாடு ஆட்டம் போட முடியாது. மேலும் ஒரு லட்சம் பேர் இராணுவத்தில் இணைத்து கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு எதுவித நிவாரணமும் கிடைக்க போவதில்லை. நாட்டின் நிதி அனைத்தும் இராணுவத்திற்கு செலவிடப்படுகிறது. அரசாங்கத்திற்கு நிதியுதவியை மாத்திரமல்ல கடனை கூட எவரும் வழங்க முன்வருவதில்லை. மியன்மாருக்கு சென்றதும் 50 ஆயிரம் டொலர்களை பொக்கற் மணியாக கொடுத்து திருப்பி அனுப்பியுள்ளனர்.
எனினும் போய் வந்த செலவுகள் இதனை விட அதிகம். இதெல்லாம் பைத்தியக்காரத்தனம். பொருளாதார நெருக்கடியில் கழுத்து இறுகிப் போயுள்ள நிலையில் மூன்று லட்சம் தமிழர்களை மீள்குடியேற்றுமாறு சர்வதேசம் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. அதேவேளை இந்தியா இரண்டு, மூன்று சவுக்கடிகளை கொடுத்தே பசில், கோத்தபாய, லலித் வீரதுங்க ஆகியோரை அனுப்பி வைத்துள்ளது. ஐரோப்பாவில் இருந்து சென்ற நிலையில் திருப்பி அனுப்பிய கப்டன் அலி கப்பலின் பொருட்களை இந்தியா இவர்களின் தோளில் ஏற்றி மீண்டும் இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது.
அதிகாரப் பகிர்வை மேற்கொள்ளாவிட்டால் 5 சதம் கூடத் தரப்பட்ட மாட்டாது எனக் கூறியதும், இவர்கள் மாகாண சபைகளுக்கும் அப்பால் சென்று அதிகாரப் பகிர்வை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளனர். அத்துடன் அரசாங்கத்தில் உள்ள இனவாதிகளை விரட்டி விடுமாறும் இந்தியா கூறியுள்ளது. தமது பெரிய தனத்தை நாட்டுக்குள் காட்டிக் கொண்டாலும், இவ்வாறு நாட்டைக் காட்டிக் கொடுத்த யுகத்தை வரலாற்றில் காணவில்லை எனவும் புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.