கொலரோடா கப்பல் சென்னை செல்வதில் தாமதம்: நிவாரண பொருட்கள் செவ்வாய் அன்று கொழும்பு நோக்கி புறப்படும்
-
இவ் விடயம் 06. 07. 2009, (செவ்வாய்),
தமிழீழ நேரம் 14:45க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
நேற்று சென்னைக்கு வரவேண்டிய கொலராடோ கப்பல் தாமதமாக இன்று மதியம் சென்னைக்கு வரவிருப்பதால் நிவாரணப்பொருட்களை ஏற்றிக்கொண்டு நாளை (செவ்வாய்) மதியம் கொழும்பு நோக்கி புறப்படும் என்று தெரிவித்துள்ளார்கள்.
இலங்கை தமிழர்களுக்காக ஐரோப்பிய தமிழர்கள் 884 டன் நிவாரணப் பொருட்களை வணங்கா மண் கப்பலில் அனுப்பினர். அந்த கப்பலை இலங்கை அரசு திருப்பி அனுப்பியது. அதன்பின், சென்னை கடல் பகுதியில் பல நாட்களாக வணங்காமண் கப்பல் காத்திருந்தது.
வணங்கா மண் கப்பல் கடந்த 2ம் தேதி சென்னை துறை முகத்துக்குள் வந்தது. தீவிர சோதனைக்குப் பிறகு, கப்பலில் இருந்த நிவாரணப் பொருட்கள், கன்டெய்னர்களில் அடைக்கப்பட்டன. சேதமடைந்த பொருட்களை அப்புறப் படுத்தினர். 27 கன்டெய்னர்களில் நிவாரணப் பொருட்கள் அனைத்தையும் அடக்கினர். அதன் பின், வணங்காமண் கப்பல் நேற்று கொல்கத்தா சென்றது.
இதையடுத்து, 27 கன்டெய்னர்களையும் சென்னை துறைமுகத்தில் உள்ள சிசிடிஎல் என்ற தனியார் நிறுவனத்திடம் துறைமுக அதிகாரிகள் ஒப்படைத்தனர். அவற்றை கொலராடோ என்ற தனியார் சரக்கு கப்பலில் இன்று இலங்கைக்கு அனுப்ப திட்டமிடப்பட்டது. ஆனால், கொலராடோ கப்பல் சென்னை துறைமுகத்துக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சிசிடிஎல் நிறுவன அதிகாரி கூறுகை யில், ‘‘கொலராடோ கப் பல் கொழும்பில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு நேற்று மதியம் வருவதாக இருந்தது. கடல் சீற்றம் காரணமாக இந்த கப்பல் இன்று பகல் 2 மணிக்கு வருகிறது. இதனால் கப்பல் இன்று இலங்கை செல்லாது. நிவாரணப் பொருட்கள் அடங்கிய கன்டெய்னர்களை ஏற்றிக் கொண்டு நாளை மதியம் இலங்கை புறப்படும்’’ என்றார்.