ஈழமக்களுக்காக திமுக,அதிமுக ஒன்றிணைந்தால் அவர்களுடன் தேமுதிகவும் இணைந்து போராடும் – விஜயகாந்த்

e0aeb5e0aebfe0ae9ce0aeafe0ae95e0aebee0aea8e0af8de0aea4e0af8dதே.மு.தி.க வின் சார்பில் இன்று நடைபெற்ற ஈழத்தமிழர் படுகொலை கண்டனப் பேரணியில் உரையாற்றும் பொழுது ஈழமக்களை காப்பாற்ற திமுவும் அதிமுகவும் இணைந்து போராடினால் தேமுதிகவும் அவர்களுடன் இணைந்து போராடும் என்று கூறினார்.

இலங்கையில் தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசை கண்டித்தும், அங்கு போரை நிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையும், அமெரிக்காவும் தலையிட வலியுறுத்தியும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் அக்கட்சியின் சார்பில் தீவுத்திடலில் இருந்து சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை வரை பேரணி நடைபெற்றது. கருப்புச்சட்டை அணிந்து இதில் பங்கேற்ற விஜயகாந்துடன் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த், அவைத்தலைவர் பண்ருட்டி இராமச்சந்திரன், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, இளைஞரணி செயலாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட ஏராளமான மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

“இலங்கைத்தமிழர் பிரச்சனையில் நமக்கு உணர்வு இருக்கிறது என்பதற்கு இந்த கூட்டமே சான்றாகும். இவ்வளவு பேர் கொளுத்தும் வெயிலையும்  பொருட்படுத்தாமல் கலந்து கொண்டிருப்பது அதனை எடுத்துக் காட்டுகிறது. நம் மக்கள் இலங்கையில் தினம் தினம் செத்து மடிகிறார்கள். அதனால் நமக்கு இந்த வெயில் ஒன்றும் பெரிதல்ல. இங்குள்ள கட்சிகள் இலங்கை பிரச்சனையில் நாடகமாடி வருகிறார்கள். இலங்கை அதிபர் ராஜபக்சேவோ, ‘ விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே போட்டால்தான் போர் நிறுத்தம்’ என்று கூறுகிறார். அதே கருத்தைத்தான் மத்திய அமைச்சர்கள் பிரணாப்முகர்ஜியும், சிதம்பரமும் தெரிவிக்கிறார்கள்.

பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு வந்தால்தானே விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே போட முடியும். விடுதலைப்புலி கள் வைத்திருப்பது கேடயம் தான். சிங்கள அரசு தான் கத்தி வைத்திருக்கிறது. கேடயம் வைத்திருப்பவர் அதனை கீழே போட்டுவிட்டால் கத்தி வைத்திருப்பவர் அவரை குத்திவிட மாட்டாரா? ஆகையால் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைக்கு தீர்வு கண்டுவிட்டு அதன் பிறகே விடுதலைப்புலிகளை ஆயுதங்களை கீழே போட சொல்ல வேண்டும். அடுத்த நாட்டு பிரச்சனையில் ஓரளவுக்குத்தான் தலையிட முடியும் என்று மத்திய அரசு கூறுகிறது. அப்படியானால் இலங்கையுடன் இந்தியா எப்படி ஒப்பந்தம் போட்டது. மத்திய அரசுக்கு உரிமை இல்லை என்று சொன்னதால்தான் இந்த பிரச்சனையில் ஐ.நா. தலையிட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். எங்களை பார்த்து தான் இப்போது மற்ற கட்சிகளும் ஐ.நா. தலையிட வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.

இலங்கையில் தமிழினம் அழிந்து கொண்டிருக்கிறது. எனவேதான் இதில் ஐ.நா. தலையிட்டு போரை நிறுத்த வழிவகை காண வேண்டும் என்று இந்த பேரணியை நாங்கள் நடத்துகிறோம். தேமுதிக எப்போதும் ஆக்கப்பூர்வமான வேலைகளையே செய்யும். நான் நடிகனாக இருந்தபோதே இலங்கை தமிழர் பிரச்சனைக்காக எம்.ஜி.ஆர்., சிவாஜி நடத்திய ஊர்வலங்களில் பங்கேற்றிருக்கிறேன். இலங்கை தமிழர் பிரச்சனை முடியும் வரை பிறந்தநாள் கொண்டாடுவதில்லை என்றும் முடிவு செய்திருக்கிறேன்.

இந்த திமுக அரசு சாதாரண சட்டக் கல்லூரி சண்டையையே நிறுத்த முடியவில்லை. நேற்று ஐகோர்ட்டில் நடைபெற்ற சண்டையையும் இந்த அரசால் நிறுத்த முடியவில்லை. இவர்களால் எப்படி இலங்கையில் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க முடியும்.  ஒரு சாதாரண தண்ணீர் பிரச்சனைக்காக கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்கும்போது, அதிகாரிகள் ஓடோடி வந்து நடவடிக்கை எடுக்கிறார்கள். அந்த அடிப்படையில் தான் நாடாளுமன்ற தேர்தலையும், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் புறக்கணித்தால் இந்த விஷயத்தில் ஐ.நா. தலையிடும் என்று நான் கூறுகிறேன்.

தமிழர்கள் மீது இலங்கையில் வான்வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டு அவர்கள் படுகொலை செய்யப்படு கிறார்கள். அதனை இந்த திமுக அரசு இதுவரை கண்டிக்கவில்லை. இங்குள்ள கட்சிகள் கூட்டணி பற்றிதான் பேசுகின்றார்களே தவிர, இலங்கை தமிழர் பிரச்சனை பற்றி பேசுவதில்லை. தமிழ்நாட்டில் திமுகவும், அதிமுகவும் பெரிய கட்சிகள் என்று கூறுகிறார்கள். இந்த இரண்டு பெரிய கட்சிகளும் இலங்கை தமிழர் பிரச்சனைக்காக ஒன்றிணைந்து போராடுவார்களா? அவ்வாறு இவர்கள் ஒன்றிணைந்து போராடினால் நானும் அவர்களின் பின்னால் வருவேன்.

வரும் 24 ந் திகதி அமெரிக்க நாடாளுமன்றம் கூடுகிறது. அப்போது நம்முடைய போராட்டம் அவர்களுடைய செவிக்கு எட்டும் வகையில் அமைய வேண்டும். இருந்தாலும், தேமுதிக தொண்டர்கள் அனைவரும் ஐ.நா. பொதுச் செயலாளருக்கும், அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும் இலங்கையில் போரை நிறுத்தக்கோரி ஒரு கோடி தந்திகள் அனுப்ப வேண்டும். இந்த பிரச்சனையில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்” என்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.