இன்னுமொரு……… (கவிதை)
-
இவ் விடயம் 13. 07. 2009, (செவ்வாய்),
தமிழீழ நேரம் 20:30க்கு பதிவு செய்யப்பட்டது
- எம்மவர் படைப்புக்கள்
பாழாய்ப்போன பதவிக்காய் – உன்
(சீ…. இல்லை இனி நீ என்ன எம்மினம்?)
எம்மினத்தை துடிதுடிக்க – எம்
கண்முன்னே துடைத்தழிக்க
துணைபோய்விட்டயே துரோகியே!?- நீ
மத்திய அரசிடம் பேசிய பேரமெல்லாம் – உன்
பிள்ளைதொடங்கி பேரன்வரை
ஏன் கொள்ளுப்பேரன்வரை
பதவியை அனுபவித்து அதனூடே
கோடிகோடியாய் சம்பாதிக்கத்தானே?
பதவியைப் பயன்படுத்தி
எப்போதேனும் நீங்களெல்லாம்
பணிவிடை செய்ததுண்டா மக்களுக்கு?
பதவியூடாக உனக்கு
பணம்தான் வேண்டுமென்ற நோக்கோடு
பதவிபற்றி மத்தியில் பேசிய பேரத்தை
ஈழத்தமிழர் எம்மிடம் பேசியிருப்பாயானால்…..
உனக்குமட்டுமல்ல – உன்
மொத்தத்தலைமுறையும்
உட்கார்ந்து உண்ண – கரன்சிகளை
டொலருக்கு டொலராய்,
பவுண்டுக்கு பவுண்டாய்,
யூரோவிற்கு யூரோவாய்….
அள்ளி வீசியிருப்போமே…..! – உன்
பாடையைக்கூட பணத்தால் செய்து
பரவசப்படுத்தியிருப்போமே!
இத்தனையாயிரம் உயிர்களைக்
காவுகொண்டா – உன்
பதவியை பாதுகாக்க வேண்டும்?
இத்தனையாயிரம் உயிர்களை
சிறையிலிட்டா – உன்
பரம்பரையை வாழவைக்க வேண்டும்?
அத்தனை உயிர்களும் அழியும்போது
கழிவிரக்கத்தைக்கூட உன்னால்
காட்ட முடியவில்லையே!
சராசரி மனிதனாகக்கூட
உன்னால் இருக்க முடியவில்லையே?
நித்தமும் சிங்களவன் வீசிய
கொத்துக்குண்டால் செத்துமடிந்ததில் – உன்
அரசியல் வாரிசுகளில் ஒன்றோ – அல்லது
தொலைக்காட்சி வாரிசுகளில் ஒன்றோ
இருந்திருந்தால் என்செய்திருப்பாய்???
நித்தமும் சிங்களவன் வீசிய ஷெல்லால்
அழிந்துபோன சொத்துக்களில் – உன்
அரசியல் சாணக்கியத்தால்
சேர்த்தெடுத்த சொத்துக்கள்
இருந்திருந்தால் என்செய்திருப்பாய்???
உன் இந்திய மத்திய அரசு
செய்த கொடுரத்தால் – மொத்தத்தையுமிழந்து
பிச்சைக்காரர்களே தெரியாமல்
காலம்காலமாய் வாழ்ந்த நாமிப்போ
கால்வயிற்றுக் கஞ்சிக்காய்
காத்துகிடக்கிறோம் நாற்கணக்கில் – இதில்
உன் அமைச்சரவை அமைச்சர்களின் உறவுகள்
இருந்திருந்தால் என்செய்திருப்பாய்???
மறப்பது மனிதகுணம்
மன்னிப்பது தெய்வகுணம் என்பார்கள்; – ஆனால்
உன்விடயத்தில் உனைமட்டுமல்ல
உன் தலைமுறை மொத்தத்தையும் – நாம்
மறக்கவும் மாட்டோம்,
மன்னிக்கவும் மாட்டோம்! – ஏனெனில்
நீ செய்த துரோகத்தால்
நாம்மட்டுமல்ல எம்தலைமுறையே
வேரோடு அழிந்துகொண்டிருக்கிறது;
வேதனையை சுமந்துகொண்டிருக்கிறது.
உன் துரோகத்தினாலான வலி
எம் தலைமுறையை உலுக்கியதுபோல;
உலுக்கிக்கொண்டிருப்பதுபோல
உன் துரோகத்தின் வலியை
உன் தலைமுறையும் நிச்சயம் அனுபவிக்கும் – இது
உன்னால் அழிந்துபோன ஈழத்து,தமிழகத்து
ஆத்மாக்கள் சாந்தியடையும் வரையிலும்,
கடைசி ஈழத்தமிழன் உயிருடன் உள்ளவரையிலும்
சத்தியமாய் நடந்தே தீரும்!!!!!
எங்களது வரலாறுகளில் – நீ
இன்னுமொரு காக்கை வன்னியனே……..
இப்படிக்கு ஓர்
- ஈழத்து ஆத்மா -
13-July-2009