> விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பை கட்டுப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் ‐ சிறீலங்கா அரசாங்கம்

Flag of Sri Lankaதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச வலையமைப்பை கட்டுப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இராணுவ ரீதியாக இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அழித்தொழிக்கப்பட்ட போதிலும், ஐரோப்பிய நாடுகளில் புலிகளின் செயற்பாடுகள் வழமை போன்று நடைபெற்று வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

வெளிநாட்டு வலையமைப்பை அழித்தொழிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு வழங்காவிட்டால் நிலைமை பாரதூரமாக மாறக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது.

ஐரோப்பிய நாடுகளில் வாழும் இலங்கைத் தமிழ் வம்சாவளியினர் மீது ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ரவின்த ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.

புகலிடம் கோரி அகதிகளாக தம்மை வெளிப்படுத்திக் கொண்டுள்ள ஐரோப்பா வாழ் தமிழர்கள் இலங்கையில் சமாதானத்தை நிலைநாட்ட ஆதரவளிக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தல்களின் போது தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் தோற்கடிக்கப்பட்டமை ஓர் சாதகமான நிலைமை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தத்திற்கு பின்னரான இலங்கையின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பூரண விளக்கம் அளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

சில ஐரோப்பிய நாடுகள் இலங்கைப் பிரச்சினையை பிழையாக விளங்கிக்கொண்டுள்ளதாகவும், அதன் காரணமாகவே கடந்த காலங்களில் யுத்த நிறுத்தமொன்றை ஏற்படுத்துமாறு வேண்டியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று தசாப்த காலமாக நீடித்த யுத்தம் நிறைவடைந்து சில வாரங்களே கழிந்துள்ள நிலையில் துரித கதியில் முழுமையான இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்த முடியாது என்பது யதார்த்தபூர்வமான உண்மை என அவர் தெரிவித்துள்ளார்.

ஒரே இரவில் வடபகுதியில் இயல்பு நிலையை ஏற்படுத்த முடியும் என எவரேனும் எதிபார்ப்பாராயின் அது ஓர் அறியாமையின் வெளிப்படாகவே நோக்கப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறெனினும், சில மேற்குலக ஊடகங்கள் அகதி முகாம் நிலவரம் குறித்து வெளியிட்டு வரும் கருத்துக்கள் பெரும் அதிருப்தி அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக அண்மையில் அகதி முகாம்களில் நாளொன்றுக்கு 1400 பேர் உயிரிழப்பதாக வெளியான செய்தி அடிப்படையற்ற தகவல் எனவும் கடந்த மாதத்தில் 163 பேர் உயிரிழந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.