யாழ் வாழ் மாக்களுக்கு… (ஒரு புலம்பெயர் ஈழத்தமிழன்)
-
இவ் விடயம் 30. 07. 2009, (செவ்வாய்),
தமிழீழ நேரம் 7:17க்கு பதிவு செய்யப்பட்டது
- எம்மவர் படைப்புக்கள்
பெரும் சாம்ராஜ்யங்களை கட்டியாண்ட இனம் தமிழினம். உலகின் மூத்த குடிகளில் ஒன்று தமிழினம். தனிப் பெரும் கலாச்சாரமும். தனித்துவமும் கொண்ட பேரினம் தமிழினம். ஆனால் வேறெவ்வினமும் காணாத பெருவீழ்ச்சி கண்டதுவும் தமிழினம் தான். ஏன்? எதனால்? சத்தியமாக இதற்கு வேற்றினத்தவன் காரணமல்ல, தமிழினம் வீழ ஒவ்வொரு தமிழனும் காரணம். கேடு கெட்ட அவன் மனம் தான் காரணம். நான் என்பதை மறந்து நாம் என்று எப்போது சிந்திக்கப் போகிறோம்? இனமானத்திற்காகவும் மண்ணுக்காகவும் எப்போது பாடுபடப் போகிறோம்? எல்லாவற்றையும் விட எப்போது தமிழுணர்வு கொள்ளப்போகிறோம்?
கடந்த 2 வருடங்களுக்கு மேலாக எம் மக்களை மரண பயத்துடன் ஓட வைத்து 1 லட்சம் மக்களை கொன்றொழித்திருக்கிறான் சிங்களவன். பல்லாயிரத்தில் ஊனப்படுத்தியிருக்கிறான். எம் தமிழ் பிஞ்சுகளை அனாதைகளாக்கி இருக்கிறான். எம்மினத்து சகோதரிகளை கொலைக்காம வெறியில் வேட்டையாடிக்கொண்டிருக்கிறான். இந்த அவலங்கள் உங்களுக்கு உறைக்கவில்லையா? இந்த வலிகள் உங்களை வதைக்கவில்லையா? எம் மண்ணையே கொலைக்களமாக்கி கொத்துக் கொத்தாக எம் மக்களை கொன்ற போதும் சரி, மந்தைகளாய் அடைத்து வைத்து கொடும்பாதகம் செய்யும் போதும் சரி, உங்களில் எந்த மாற்றமும் நிகழவில்லையே? நீங்கள் வெறும் உயிருள்ள சதைப் பிண்டங்களா? ஈழத் தமிழர் நீங்கள் உயிருடன் இருப்பதற்காய் ஈனத் தமிழராய் ஆகி விட்டீர்களா? ஒட்டுக் குழுக்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறோம், ஆயுத முனையில் அடக்கப் பட்டிருக்கிறோம், என்று சப்பைக் காரணங்கள் சொல்லாதீர்கள். சிங்களவனுக்குப் பிறக்காதவரை இந்தக் கேள்விகள் அவர்களுக்கும் சேர்த்துத் தான்.
யுத்தம் முடிந்த கொஞ்ச நாளிலேயே நயினாதீவு நாகபூசணிக்கு விழா எடுத்தீர்களே எதற்காக? விடுதலைப் போராட்டம் தோற்றதற்காகவா? அல்லது மேலே குறிப்பிட்ட அவலங்களை அம்மன் வெற்றிகரமாக நடத்தி முடித்ததற்காகவா? அல்லது வெற்றிவாகை சூடி வந்த! ராஜபக்ச, கோத்தபாயவுக்கு ஆசீர்வாதம் வேண்டியா? பேரவலம் நடந்து கொண்டிருந்த காலத்தில், மனித நேயம் மிக்க மனிதனாக எத்தனை பேர் இறைவனை வேண்டினீர்கள் அம் மக்களைக் காப்பாற்ற? எந்தக் கடவுள் காப்பாற்றியது? சின்னஞ் சிறு குழந்தைகள் ஏன் எதற்கென்றே தெரியாமல் எவ்வளவு கோரமாக, கொடுமையாக கொல்லப் பட்டார்கள் என்று உங்களுக்குத் தெரியவில்லையா? மரணமடைவதை விட மரணமடையப் போகிறோமே என்கிற பயம் எப்படியிருக்குமென்று உங்களால் உணர முடியவில்லையா? நடந்து முடிந்த மனித வதையை தடுக்க முடியாமல் போன கடவுளுக்கு நீங்கள் விழா எடுப்பது, உங்கள் வேண்டுதலின் நிறைவேற்றமா? ஊறிப் போன சம்பிரதாயமா? பக்தியின் பெயரால் நீங்கள் காட்டும் பணத் திமிரா? அடுத்ததாக நல்லூர் கந்தசாமி கோவில் திருவிழாவை கோலாகலமாக ஆரம்பித்திருக்கிறீர்கள். 22 வருடங்களுக்கு முன் இதே கோவில் முன்றலில் தான் திலீபன் தன்னுயிரைக் கொடுத்தான் தன்னினத்திற்காக. தமிழ்க் கடவுள் முருகன் என்ன செய்தான் இதுவரை? அழிவதைப் பார்த்ததைத் தவிர.
செத்துப் போன உறவை கட்டியழவோ, முறைப்படி இல்லாவிடினும் குறைந்த பட்சம் எரித்து விடவோ முடியாத இயலாமையில், மரணத்தின் துரத்தலில் ஓடும் பிணங்களாக ஓடி வந்த மக்கள் எத்தனை பேர்? கையிழந்து காலிழந்து குற்றுயிராய்க் கிடக்கையில் கைவிடப் பட்டோர் எத்தனை பேர்? கைவிட்டோர் மனங்களின் ரணங்கள் தான் எத்தனை எத்தனை..? சரி யுத்தம் முடிந்து விட்டது, அந்த வடுவை தாங்கியவர்க்கு தேற்றுதல்??? யார் கொடுப்பது? பேரழிவின் எச்சங்களாகியிருக்கும் அவர்களுக்கு ஆறுதலாய் சாய்ந்தழ, சாய்ந்து கதறியழ உங்கள் தோள்கள் நெருங்காமல் போனதேன்? தினவெடுத்த சிங்களவன் திமிருக்கு இரையாகிப் போவதுதான் அம்மக்களின் தலையெழுத்தா? இனம், மண், தன்மானம், விடுதலை என்ற உன்னத லட்சியங்களை மட்டுமே கொண்டு, எத்தனை இளைஞர்கள், யுவதிகள் தங்களின் இளமைக்கால ஆசைகளை துறந்து, மனிதப் பிறப்பின் மகத்துவத்தை துறந்து, தமிழர் விடிவுக்காய், சுதந்திர வேட்கையுடன் தலைவன் பின்னால் அணிவகுத்தார்கள்! அவர்களின் தியாகம் உங்களைச் சுடவில்லையா? கனவுகளோடு சாதனைகள் படைத்துவிட்டு விதையாகிப் போன மாவீரர்களின் கனவு கனவாகவே போவதற்கு உங்களால் முடிந்ததைச் செய்கிறீர்களா? கொலையில்லை, கொள்ளையில்லை, பெண்களுக்கும் பயமில்லை. காந்தி கண்ட கனவு தேசம் கண்முன்னே கொண்டு வந்தவன் தலைவன். காத்துநின்றவர்கள் புலிகள். கிட்டத்தட்ட எல்லாத் தமிழருமே அந்த சுதந்திரத்தை குறுகிய காலமேனும் அனுபவித்தோம். அதற்காக பாடுபட்டவர்கள் இப்போது சிங்களவனின் கொடுஞ் சிறைகளில். அங்கு என்ன நடக்கிறதென்று பத்திரிகைகள் எழுதாது, வானொலிகள் சொல்லாது, ஆனால் ஒவ்வொரு தமிழர் மனங்களாலும் உணர முடியும். உங்களால்?
உங்களின் பாரம்பரியங்களை கொண்டாடலாம் ஆனால் அதற்கு இதுவல்ல நேரம். இனப்பிரச்சனை என்ற ஒன்று இங்கில்லை, புலிகளின் போராட்டம் பயங்கரவாதம் மட்டுமே. இதோ பாருங்கள் தமிழர் எவ்வளவு சந்தோசமாக இருக்கிறார்கள், என்ற சிங்களவனின் பிரச்சாரங்களுக்கு வலிமையாக துணை போகிறீர்கள் என்பதை ஏன் உணர மறுக்கிறீர்கள்? யுத்தம் முடியவில்லை. ஈழம் மீண்டும் பின்னோக்கிச் சென்றிருக்கிறது, 1983 ம் ஆண்டுக்கு அவ்வளவே. தீர்வும், படுகொலைகளுக்கு நீதியும் கிடைக்கவில்லையேல், போர் புதிய வடிவம் கொள்ளும். அதுவரை தமிழராய் என்ன செய்யப் போகிறீர்கள்?
நடந்து முடிந்த மிகப் பெரும் இனப்படுகொலையையும், சிறீலங்கா அரசின் கோரமுகத்தையும் இன்று உலகம் உணர்ந்திருக்கிறது. உலகத் தமிழரும் எமக்காக கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் பாதிக்கப் பட்ட நாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? இந்த இழப்புகளை கொண்டு நாம் எமக்கான சுதந்திரத்தை பெறுவது தானே நாம் அவர்களுக்குச் செலுத்தும் மிகப் பெரும் அஞ்சலியும், வீரமரியாதையுமாகும். நாங்கள் உலகின் மூத்த குடிகள். எதையும் பறிப்பதற்காக போராடவில்லை. இழந்தவற்றை பெறவும், அழிந்தே போகாமலிருக்கவும் தான் இவ்வளவு பாடு படுகிறோம். தயவு செய்து ஒவ்வொரு தமிழரும் தம் பிறப்பின் கடமையை உணருங்கள். இப்போது சிங்களம் அகல வாய் திறந்திருக்கிறது எம்மை நோக்கி. அடிமை வாழ்வுக்குள் ஆட்படுவோமானால் இனி ஈழத் தமிழர் வரலாற்றில் மட்டும் தான். முடிவு ஒவ்வொரு தமிழரிடத்திலும்….?
பா. பிரதீப் – லண்டன்