செல்வராசா பத்மநாதன் இலங்கையில் தடுத்து வைப்பு சர்வதேச சமூத்துக்கு சுவிஸ் தமிழர் பேரவை விடுக்கும் பகிரங்க வேண்டுகோள்!

சர்வதேச விதிகளுக்கும் நடை முறைகளுக்கும் விரோதமாக மலேசியாவில் செல்வராசா பத்மநாதனைச் சிறீலங்கா அரசு கைது செய்து இலங்கைக்குத் தனி விமானத்தில் கடத்திப் போய் அவரைச் சித்திரவதை கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி உள்ள நிலையைக் கண்டித்து சுவிஸ் தமிழர் பேரவை இணைப்பாளர் திரு. அம்பலவாணர் கிருஸ்ணா சர்வதேசச் சமூகத்துக்குப் பகிரங்கக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடிதத்தின் முழு விபரம் பின்வருமாறு:

மலேசியாவில் செல்வராசா பத்மநாதன் கைதாகி இலங்கைக்குக் கடத்திச் செல்லப் பட்டு அங்கு அவர் சித்திரவதைக்கும் கொல்லப் படுவதற்கும் உள்ளாகி இருக்கும் செய்தியால் சுவிஸில் வாழும் புலம் பெயர் தமிழராகிய நாம் ஆழ்ந்த கவலையும் அதிர்ச்சியும் அடைந்துள்ளோம்.

முன்னரும் தமிழர் தாயகத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் அழிப்பின்போது சர்வதேச சமூகம் காட்டிய மௌனத்தால் இலங்கை அரசு மேலும் ஊக்கம் பெற்று ஆயிரமாயிரம் அப்பாவித் தமிழ்ப் பொது மக்களைக் கோரமாகக் கொலை செய்யவும் பாரிய மனித உரிமை மீறல்களைச் செய்யவும் வழி செய்தது.

இலங்கையில் இன்று 300,000க்கும் அதிகமான மக்கள் முட்கம்பி முகாம்களுக்குள் சிறைக் கைதிகளாக அவதிப் படுகின்றனர். சர்வ தேச தொண்டர் மற்றும் ஐ.நா. உதவி தொண்டர் அமைப்புகளும் கூட அவற்றுக்குள் செல்ல அனுமதிக்கப் படுவதில்லை. அந்தப் பிராந்தியத்தின் முக்கியத்துவம் மிக்க நாடுகளின் பிராந்திய அரசியல் விருப்புகளின் காரணமாக உலக நாடுகளால் விடுக்கப் பட்ட சர்வதேச போர்க் குற்ற விசாரணை ஆணையம் பற்றிய கோரிக்கையே முற்று முழுதாக உதாசீனப் படுத்தப் பட்டு விட்டது. இலங்கையில் உள்ள தமிழர் இன்று மனித உரிமை மீறல்களுக்கும் உயிர்ப் படு கொலைகளுக்கும் உள்ளாகி கவனிக்கப் படாத நிலையில் உள்ளனர்.

இத்தகைய பின்னணியில் திரு. செல்வராசா பத்மநாதன் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்ட முறையைக் கைவிட்டு வன்முறையற்ற அமைதி வழியில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கும் தாயகத் தனி அரசு அங்கீகாரத்துக்கும் தமிழ் மக்களின் போராட்டத்தை தலைமை ஏற்க முன்வந்தார். தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு விட்டதாகப் பகிரங்கமாக அறிவித்தும் ஜனநாயக வழியில் அரசியலை முன்னெடுக்கும் தமது விருப்பத்தையும் தெரிவித்தார்.
தொடர்ச்சியாகச் சர்வதேச சமூகத்தை தடை முகாம்களில் உள்ள மக்களை விடுவிக்கவும் அவர்களைச் சர்வதேசக் கண்காணிப்பில் மீள் கட்டமைப்பு மீள் குடியேற்றம் செய்ய உதவும்படி கேட்டும் வந்துள்ளார். தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அடைவதற்கு ஜனநாயக அரசியல் வழி முறைகளைக் கடைப் பிடிப்பதில் அவர் மிக உறுதியாக இருப்பவர்.

இத்தகைய அமைதி வழி ஜனநாயக நடை முறைகளை ஊக்குவிப்பதற்குப் பதிலாக, பயங்கரவாதம் என்ற சாட்டில் அவரைக் கைது செய்து இலங்கைக்கு கடத்தியதை ஆதரிப்பது சர்வதேச மனித உரிமை மீறலை அரசியல் காரணங்களுக்காகக் காட்டும் பாராமுகமாகவே உள்ளது.

கட்டாய ஆட் கடத்தல் சித்திரவதை கொலை போன்ற குற்றங்கள் தடையின்றி நிலவும் இலங்கையில் அவர் சித்திரவதைக்கும் படு கொலைக்கும் உள்ளாவது நிச்சயம். இலங்கைப் பாதுகாப்பு சேவை தமிழ் அரசியல் கைதிகளை மிருகத்தனமான மனிதாபிமானம் அற்ற முறையில் நடத்துவதில் பெயர் பெற்றவர்கள். அவர்களின் குற்றங்கள் அப்பப்போ சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைக் கண்காணிப்பு நிறுவனங்கள் உட்பட மனித உரிமை அமைப்புகளால் பட்டியலிடப் பட்டு வந்துள்ளன.
இத்தகைய படுபாதகச் சூழ்நிலையில், சர்வதேச சமூகம், மனித உரிமை அமைப்புகள், மனித உரிமை ஆர்வலர்கள், சர்வ தேச செஞ்சிலுவைச் சங்கம், போன்ற அமைப்புகள் உடனடியாக இலங்கை அரசை இவ் விடையத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து குமரன் பத்மநாதனை இலங்கை அரசு உடனடியாக விடுதலை செய்ய வற்புறுத்த வேண்டும் எனப் புலம் பெயர் தமிழராகிய நாம் கேட்டுக் கொள்கிறோம்.
உண்மையுள்ள,
…………………………
கிருஸ்ணா அம்பலவாணர்
(ஒருங்கிணைப்பாளர், தமிழர் பேரவை, சுவிற்சர்லாந்து)
For further information : tamilforumswiss@gmail.com
ID: 20090807_ka

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.