வடக்கு தேர்தல் முடிவுகளும், அரசியல் தலைவர்களின் கருத்துக்களும் – ஒரு பார்வை

jaf_ellectionநடந்து முடிந்த யாழ்,வவுனியா,மற்றும் ஊவா தேர்தல்களில், (யாழ்,ஊவா – உள்ளூராட்சி சபைகளை ஆளும் கட்சி கைப்பற்றியுள்ளது). இத்தேர்தல் முடிவுகள் குறித்து, இத்தேர்தலில் போட்டியிட்ட பல அரசியல் தலைவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். அவை குறித்த ஒரு பார்வையே இது.

வடக்கில் மீண்டும் ஒரு பிரிவினையை உண்டு பண்ணவே இவ் அவசர தேர்தல் – ஜே.வி.பி

அண்மையில் நடாத்தப்பட்ட தேர்தல் மூலம், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மீண்டும் ஒரு தடவை வடக்கில் பிரிவினவாதத்தை ஏற்படுத்தியுள்ளது என ஜே.வி.பி தெரிவித்துள்ளது. அங்கு இயல்பு நிலை ஏற்பட்டுள்ளதாக வெளி உலகிற்கு காட்டிக்கொள்வதற்காகவே இத்தேர்தலை அரசு அவசர அவசரமாக நடத்தியதாகவும், குறுகிய அரசியல் நோக்கங்களை அடைவதற்காகவே வடக்கு தேர்தல் நடத்தப்பட்டதாகவும், ஜே.வி.பியின் செயற்குழு தலைவர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

ஈ.பி.டி.பி இந்த தேர்தலில் தோல்வி பெற காரணம்,ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் அதிக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டதே. அத்துடன், யாழ் தேர்தல் முடிவுகள் படி, அம்மக்கள் இன்னமும் ஆளும் தரப்பினை வெறுத்துவருவது உறுதியாகிறது என தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்திற்காக,ஆளும் தரப்பினால் பஸ் டிப்போ ஒன்று ழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளது, மாணவர்களுக்கும், விளம்பரம் செய்தனர் வேட்பாளர்கள்

ஊவாவிலும், அரசு தனது உச்சகட்ட பலத்தை பயன்படுத்தி பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், இதற்காக, கெப்பிட்டிபொல பிரதேச பஸ் டிப்போவின் பஸ்களை பயன்படுத்தியதுடன், துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான 400 வாகனங்களும், ஏனைய அமைச்சுக்களுக்கு சொந்தமான வாகனங்களும் பிரச்சார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கு வேட்பாளர்களின் பெயர், விருப்பு இலக்கம் போன்றவை அச்சிட்ட கோவைகளை ஆளும் கட்சி வேட்பாளர்கள் வழங்கியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் வடக்கு தேர்தலில் அமோக வெற்றி

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிட்ட அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ், வவுனியா மாநகர சபையின் ஐந்து ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. அத்துடன் யாழில் போட்டியிட்ட 4 வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.

நான், தோல்வி அடைந்துள்ளேன், எனினும் மக்களின் சுயமாக வாக்களிக்கும் சந்தர்ப்பம் கிட்டியுள்ளது – டக்ளஸ் தேவானந்தா

நடந்து முடிந்த தேர்தல் குறித்து அமைச்சர் ஈ.பி.டி.பி யின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா கருத்து தெரிவிக்கையில்,

‘எமது மக்கள் சுயமாக சிந்தித்து சுதந்திரமாக தங்களது விருப்பத்தை வெளிப்படுத்துவதற்கு சூழல் உருவாகியிருப்பதையே இத்தேர்தல் வெளிப்படுத்தி இருக்கிறது. எம்மக்கள் இழந்தவற்றை மீளப்பெற்று நடைமுறைச்சாத்தியமான தீர்வை வென்றெடுக்க அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்.

இம்முறை மாகாண சபை தேர்தலில் நான் தோல்வி அடைந்துள்ளேன், எனினும் மக்கள் சுயமாக வாக்களித்தமை குறித்து மகிழ்வடைகிறேன் என தெரிவித்துள்ளார்.

யாழில் அதிகூடிய விருப்பு வாக்குகள் பெற்று த.தே.கூ முடியப்பு ரெமிடியஸ் வெற்றி

இதேவேளை யாழ் மாநகர சபை தேர்தலில், ஆளும் ஐக்கிய மக்கள் முன்னணி வெற்றி பெற்றுள்ள போதும், அதிகூடிய விருப்பு வாக்குகளாக 4,223 வாக்குகளை பெற்று முதலிடத்தில் இருப்பவர் முடியப்பு ரெமிடியஸ் ஆவார்.

இவருக்கு அடுத்ததாக, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிட்ட ஈ.பி.டி.யி ன் சார்பில் போட்டியிட்ட துரைராஜா இளங்கோ (றீகன்) 3,387 வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார்.

தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி 424 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தை கைப்பற்றியுள்ளார்.

பல மோசடிகள் இடம்பெற்ற போதும், ஆளும் கட்சியினால்  எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை – மாவை சேனாதிராஜா

இதேவேளை, தேர்தல் முடிவுகள் குறித்து, த.தே.கூ கருத்து தெரிவிக்கையில், வவுனியா நகர சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றிருப்பது ஆறுதல் தரும் செய்தியாகும், 80 சதவீதமான மக்கள் வடக்கு தேர்தலில் பங்கு பெறவில்லை. மக்களிடம் ஏற்பட்டிருந்த அச்சம், பீதி மட்டுமல்ல மன விரக்தியும் இதற்கு காரணம்.

ஆளும் கட்சிக்கு வாக்களிக்க கோரி, மீனவர்கள் மிரட்டப்பட்டமை, மக்கள் மிரட்டப்பட்டமை, அரசின் முழு வளங்களும் இத்தேர்தலில் பாவிக்கப்பட்டமை, அரசின் அதிகார பலம், இராணுவத்தின் தொடர்ச்சியான பிரசன்னமும், நடமாட்டமும், அமைச்சர்களின் தொடர்ச்சியான யாழ் பயணம், மாணவர்கள், அரச ஊழியர்களை நிர்ப்பந்தமாக அழைத்து பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ள வைத்தமை, போன்றவை அரசு இத்தேர்தலில் வெற்றி பெறுவதற்கான காரணங்கள்.

ஆனால், உண்மையில் அரசு எதிர்பார்த்த அளவுக்கு தமிழ் மக்களிடம் வெற்றி பெறவில்லை.

ஆனால் பல இடங்களில் எமது மக்கள் தேர்தலில் அக்கறை காட்டாமல், வாக்களிக்காமல் இருந்தமை எமக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், எமக்கு வாக்களித்த மக்களுக்கு இதயபூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் என த.தே.கூ இன் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

புளொட் வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களிப்பதை தடுக்கும் முயற்சியில் அரச கட்சிகள் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு

வவுனியா நகர சபை தேர்தலில், ஆளும் கட்சியின் ஆதரவுடன் போட்டியிட்ட கட்சிகள் (ஈ.பி.டி.பி, ஈரோஸ்,சிறிடெலோ), புளொட் வேட்பாளருக்கு, மக்கள் வாக்களிப்பதை தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தேர்தல் நேரம், இவ்விரு பிரிவினருக்கும் இடையே கைகலப்புக்களும் இடம்பெற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக புளொட் அமைப்புக்கு செல்வாக்கு மிக்க பிரதேசங்களான கோயில்குளம், திருநாவற்குளம், போன்றவற்றிலேயே, ஆளும் தரப்பு இடையூறு விளைவித்த போதும், அங்கு போட்டியிட்ட ஆளும் தரப்பினர் எவரும் வெற்றி பெறவில்லை எனவும், புளொட் தெரிவித்துள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.