கேபி கடத்தப்பட்டது அரச பயங்கரவாதத்தின் உச்சக் கட்டம்! – தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் – கனடா

விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் கடத்தப்பட்டதை கண்டித்து கனடா தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.

அவ்வறிக்கையின் முழுவிபரம் பின்வருமாறு:

image003

ஓகஸ்ட் 10, 2009
ரொறன்ரோ
செய்தி அறிக்கை

கேபி கடத்தப்பட்டது அரச பயங்கரவாதத்தின் உச்சக் கட்டம்!

விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் கடத்தப்பட்டு பின்னர் நாடு கடத்தப்பட்ட செய்தி எமக்கு ஏமாற்றத்தைத் தருகிறது. கேபியைக் கைது செய்து பின்னர் அவரை ஸ்ரீலங்காவின் புலனாய்வுத் துறைக்கு கையளித்ததன் மூலம் மலேசிய அரசு அவருக்கு நீதிமன்றத்தின் முன் ஒரு முறையான விசாரணைக்கான வாய்ப்பை மறுத்துள்ளது. கேபியைப் பிடித்தவர்கள் அவரிடம் இருந்து ஒப்புதல் வாக்குமூலத்தைப் பெறப் பயமுறுத்தல் மற்றும் சித்திரவதை போன்றவற்றைப் பயன்படுத்துவார்கள் என நாம் கவலையடைகிறோம். அவரது கைதை நாம் அரச பயங்கரவாதத்தின் உச்சகட்டம் எனப் பகிரங்கமாகக் கண்டிக்கிறோம்.

கேபியின் கைது மிகவும் கண்டிக்கத்தக்கது. காரணம் அவர் வி.புலிகள் இயக்கம் வன்முறையைக் கைவிட்டு சனநாயகம், அரசியல் மற்றும் இராசதந்திர வழிகளில் தமிழ்மக்கள் இழந்த உரிமைகளை வென்றெடுக்க இயக்கத்தை மறுசீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். கேபியை கைது செய்ததன் மூலம் ஆட்சித்தலைவர் மகிந்த இராசபக்சே பெரும்பான்மை சிங்களவருக்கும் நீண்டகாலமாக கொடுமைப்படுத்தப்பட்ட தமிழருக்கும் இடையிலான இனக் காயங்களை குணப்படுத்துவதற்கான வரலாற்று வாய்ப்பை இழந்துவிட்டார்.

இது சமவுரிமை மற்றும் சுதந்திரத்துக்கான தமிழர்களது போராட்டம் எதுவானாலும் அதனை அடக்கி ஒடுக்கிவிட ஸ்ரீலங்கா அரசு எத்தனிக்கிறது என்பதற்கான மேலதிக சான்றாகும்.

ஸ்ரீலங்கா தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், செய்தியாளர்கள் மற்றும் உதவிப் பணியாளர்கள் போன்றோரைக் கொலை செய்வதில் பெயர் எடுத்திருக்கிறது. 2005 ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை 11 செய்தியாளர்கள் (இதில் 9 பேர் தமிழர்கள்) கொலை

செய்யப்பட்டுள்ளார்கள். அய்ம்பது செய்தியாளர்கள் கடத்தப்பட்டுள்ளார்கள். அய்ம்பதுக்கும் மேலான செய்தியாளர்கள் அடக்குமுறைக்குப் பயந்து நாட்டை விட்டு ஓடிவிட்டார்கள். எல்லோராலும் பெருமளவு மதிக்கப்பட்ட செய்தியாளர் ஜே.எஸ். திஸ்சநாயகம் எந்தக் குற்றமும் சுமத்தப்படாத நிலையில் 150 நாட்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார். பின்னர் ஓகஸ்ட் 25 இல் அவர் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் (Prevention of Terrorism Act (PTA) கீழ் மூன்று குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இவர் மார்ச் மாதம் 7 ஆம் நாள் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது கூட்டாளிகளான வி.ஜெசீகரன் மற்றும் வடிவேல் வளர்மதி ஆகியோரைச் சந்திக்கச் சென்றபோது கைது செய்யப்பட்டார்.

பல தமிழ் வணிகர்கள் கப்பத்துக்காக கடத்தப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர், அய்ந்து தமிழ் மருத்துவர்கள், அரச அதிபர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் தமிழர்கள் என்பதாலேயே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

முள்ளிவாய்க்காலில் நடந்த போரின் இறுதிக்கட்டத்தில் 25,000 தமிழ்பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். அதேயளவு பொதுமக்கள் பல்குழல் பீரங்கித் தாக்குதலில் படுகாயப்பட்டுள்ளார்கள். இப்போது 280,000 மக்களும் ஏறக்குறைய 10,000 விடுதலைப் புலி போராளிகளும் அண்ணளவாக இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் உள்ள முட்கம்பி வேலிகளால் சுற்றி அடைக்கப்பட்டுள்ள திறந்த வெளி சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இந்த அப்பாவி மக்கள் எந்தச் சட்டத்தையும் மீறவில்லை. இருந்தும் அவர்கள் குற்றவாளிகளாக நடத்தப்படுகிறார்கள். முகாம்களுக்குள் சித்திரவதை, பாலியல் வன்கொடுமை மற்றும் பட்டினி காணப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழர்களுக்கு உணவும் மருந்தும் மறுக்கப்படுகிறது. அவர்கள் பட்டினியாலும் நோயினாலும் சாக விடப்படுகிறார்கள்.

போர்முனையில் கடைசிவரை இருந்து ஒரேயொரு செஞ்சிலுவைச் சங்கம் கடந்த மாதம் தடுப்பு முகாம்களுக்குள் நுழையத் தடுக்கப்பட்டது. சகலவல்லமை வாய்ந்த பாதுகாப்புச் செயலரின் கட்டளைக்கு இணங்க கிழக்கில் இயங்கிய அந்த அமைப்பின் நான்கு அலுவலகங்கள் மூடப்பட்டன.

கடந்த மாதம் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தில் வெளிவந்த ஒரு கட்டுரையில் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் நான்கு சட்டவாளர்கள் “கருப்புக் கோட்டில் இருக்கும் துரோகிகள்” என வருணிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் செய்த குற்றம் சன்டே லீடர் என்ற செய்தித்தாளுக்கு எதிராக ஆட்சித்தலைவர் மகிந்த இராசபக்சேயின் உடன்பிறப்பு பாதுகாப்பு செயலர் கோத்தபாய இராசபக்சே தொடுத்த இரண்டு வழக்குகளுக்களில் அவர்கள் தோன்றியதே ஆகும். பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட கட்டுரையில் சுமந்திரன் வி.புலிகள் சார்பாக வாதடும் சட்டவாளர் என தவறாகவும் வன்மத்தோடும் குறிப்பிட்டிருந்தது.

பெயர் குறிப்பிடப்படாத சட்டவாளர்களை மேற்கோள் காட்டி எழுதப்பட்ட அந்தக் கட்டுரை”ஸ்ரீலங்கா ஒரு சுதந்திரமான நாடாக இன்று இருப்பதற்கு தேசிய கதாநாயகனான பாதுகாப்பு செயலரின் தடுமாற்றமற்ற ஈடுபாடும் மையப்பார்வையுமே காரணமாகும். அப்படிப்பட்ட ஒருவரை எதிர்ப்பது துரோகமும் ஒழுக்கக்கேடுமாகும்” என வருணித்தது. இது ஸ்ரீலங்கா அரசியல் மற்றும் ஊடகங்களில் ஊடுருவியுள்ள அருவருக்கத்தக்க சிங்கள இனவாதத்தை வெளிப்படுத்துகிறது.
மகிந்த இராசபக்சே தன்னைத் தெரிவு செய்தவர்கள் சிங்கள – பவுத்த மக்கள் என்பதை பல தடவை சொல்லிச் சொந்தம் கொண்டாடியுள்ளார். ஆன காரணத்தால் அந்த மக்கள் தனக்கு கொடுத்த ஆணையை காட்டிக்கொடுக்க முடியாதென்று கூறியுள்ளார். தனது “மகிந்த சிந்தனை”க்கு ஒப்ப அவர் தமிழர்களுக்குத் தாயகம் இல்லை தன்னாட்சி உரிமை இல்லை, தேசியம் இல்லை என்று சொல்லியுள்ளார்.

சிங்கள அரசானது தனது அதிகாரம் மற்றும் ஒடுக்குமுறை ஆட்சிக்கு ஒரு தமிழ்முகத்தைக் காட்ட வி.புலிகளது அமைப்பை விட்டு விலகியவர்களையும் அரசியல் அழுகுதொழு நோயாளிகளையும் கூட்டி வைத்துள்ளது.

இந்தப் பின்னணியில்தான் கேபியின் கடத்தல் மற்றும் அவரைத் துருவித் துருவி நடத்தும் விசாரணை தமிழ்த் தேசியத்தின் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. அது மட்டும் அல்லாது அரசு இனம் அல்லது சமயம் இரண்டையும் வெளிக்காட்டும் அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதைத் தடைசெய்யத் திட்டமிட்டுள்ளது. தனிமனிதவுரிமை எப்படி வாக்கெடுப்பு மூலம் தீர்மானிக்க முடியாதோ அப்படியே பெரும்பான்மை இனத்தோருக்கு சிறுபான்மை மக்களது உரிமைகளைத் தீர்மானிக்கும் உரிமை கிடையாது. இது ஸ்ரீலங்காவின் ஸ்லோபோடன் என அழைக்கப்படும் மகிந்த இராசபக்சே சிங்கள- பவுத்தம் மட்டும் ஆன அரசொன்றை உருவாக்க வெளிப்படையான முயற்சி ஈடுபட்டுள்ளார் என்பதற்கான அச்சுறுத்தலாகும்.

எனவே ஸ்ரீலங்கா அரசு கேபி க்கு சட்டவாளர்களை வைத்து ஒரு நியாயமான விசாரணை நடைபெறுவதற்குரிய பொறுப்பை அனைத்துலக சமூகமும் மனிதவுரிமை அமைப்புக்களும் ஏற்க வேண்டும்.

மக்களை அடக்கி ஆள நினைக்கும் அரசுகள் அவர்களிடம் உள்ள அநீதிக்கு எதிரான அரசியல் உறுதிப்பாட்டை உடைப்பதன் மூலம் செய்து முடிக்கின்றன. இதைத்தான் ஸ்ரீலங்கா அரசு அச்சொட்டாகச் செய்யத் துடிக்கிறது. ஸ்ரீலங்காவின் மனிதப்படுகொலை வரலாற்றைப் பார்ப்பவர்களுக்கு இதுதான் பெரிய அறைகூவலாக இருக்கிறது. எனவே புலம்பெயர் தமிழர்கள் ஒடுக்குமுறை அரசை எதிர்கொள்ள அணியமாக வேண்டும்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.