யானைக் குட்டிகளின் பிரச்சினை தேசிய முக்கியத்துவமிக்கது ‐ 300000 முகாம் மக்களின் பிரச்சினை?

vanni campsபின்னவல யானைகள் காப்பகத்திலிருந்து கொண்டுசெல்லப்பட்டு தலதா மாளிகையில் பூஜைக்கு உட்படுத்திய இரண்டு யானைக் குட்டிகள் தொடர்பான செய்திகள் இலங்கையில் தற்போது முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன.

இந்த யானைக் குட்டிகள் இரண்டைக் குறித்து எழுதாத, கூறாத பத்திரிகைகளோ, வானொலிகளோ, தொலைக்காட்சிகளோ இலங்கையில் இல்லையெனக் கூறலாம். இதுதொடர்பாக எழுதப்பட்ட ஆசிரியர் தலையங்களை நோக்கும்போது இரண்டு கண்களிலும் கண்ணீர் மல்குவதுடன், மனத்திற்கு ஆத்திரத்தையும் ஏற்படுத்துகின்றது. இவ்வாறான அநியாயம் உலகில் மிகவும் உன்னதாக இலங்கைத் தீவில் எப்படி இடம்பெற்றது என வீறுகொண்டு எழுந்த ஊடகவியலாளர்கள், விலங்கியல் உரிமைகள் பாதுகாப்போர், தலதா மாளிகையின் தியவதனே நிலமேயோடு பாரிய மோதலை ஆரம்பித்தனர். இந்த மோதல்கள் வெற்றி, தோல்வியின்றி தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த மூன்று வயதான யானைக் குட்டிகளான ராஜூ, சிந்து ஆகியன அமைச்சரவையின் அனுமதியுடனேயே தலதா மாளிகையில் பூஜைக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது. தலதா மாளிகையின், பௌத்த பெரஹர போன்ற நிகழ்வுகளுக்காகவே இந்த யானைக் குட்டிகள் வழங்கப்பட்டன. அமைச்சரவையில் இதற்கு எவரும் எதிர்ப்பு வெளியிடவில்லை.

தற்போது இந்த இரண்டு யானைக் குட்டிகளையும் மீண்டும் தமது தாயுடன் சேர்க்குமாறு கோரி விலங்கியல் பாதுகாப்பு அமைப்புகள் இரண்டு உயர் நீதிமன்றத்தில் இரண்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன்.

இதில் ஒரு மனுவை ஜனாதிபதியின் ஊடக ஆலோசகரான லுஷான் ராஜகருணவின் மனைவி தாக்கல் செய்துள்ளார். அடுத்த மனுவை சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் மனைவி தாக்கல் செய்துள்ளார். இந்த இரண்டு மனுக்களும் ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பிடித்துக் கொண்டன.

இந்த இரண்டு யானைக் குட்டிகள் தொடர்பாக அண்மையில் வெளியாகிய வார இறுதிப் பத்திரிகை, ஆயிரக் கணக்கான வார்த்தைகள் அடங்கிய விசேட பக்கங்களை வெளியிட்டிருந்தது. சண்டே ரைம்ஸ், லக்பிம ஆங்கில இதழ், சண்டே லீடர், த நேஷன் ஆகிய சகல வார பத்திரிகைகளும் இந்த இரண்டு யானைக் குட்டிகள் தொடர்பாக எழுதின. அரசாங்க ஊடகங்களைத் தவிர ஏனைய அனைத்து சிங்கள வார இதழ்களும் இந்த யானைக் குட்டிகள் தொடர்பாக முக்கிய செய்திகளை வெளியிட்டிருந்தன. நாட்டின் அரசியல் பேச்சுவார்த்தைகளின் நிகழ்ச்சி நிரல்களை உருவாக்குவதில் பங்களிப்பை வழங்குவது ஊடகங்களின் ஒரு பொறுப்பாகும். இதனடிப்படையில், இரண்டு யானைக் குட்டிகள் தொடர்பான செய்திகளை நாட்டின் பிரதான செய்திகளாக கொண்டுவந்து, அதற்கு தீர்வைத் தேடுவதற்காக ஊடகங்கள் பெரும் பங்களிப்புக்களை வழங்கின. உதாரணமாக, திவயின மற்றும் ஐலண்ட் பத்திரிகைகள், சிறப்புப் பத்திகளுக்கு மேலதிகமாக அதுதொடர்பான இரண்டு ஆசிரியர் தலையங்கங்களையும் வெளியிட்டிருந்தன. இந்த ஆசிரியர் தலையங்கங்களில் யானைக் குட்டிகள் தொடர்பாக இவ்வாறு வர்ணிக்கப்பட்டிருந்தன.

இந்த யானைக் குட்டிகள் கடத்திச் செல்லப்பட்டது ஜனாதிபதிக்கெதிரான சூழ்ச்சிகள் என அந்தப் பத்திரிகைகள் தெரிவித்திருந்தன. ஜே.வி.பி.க்கு சார்பான ஆங்கில இணையத்தளமான லங்கா ட்ரூத், கடந்த ஜூலை 27ம் திகதி மற்றும் 31ம் திகதி ஆகிய இடைப்பட்ட காலப்பகுதியில் இந்த யானைக் குட்டிகள் தொடர்பாக நீண்ட செய்திகளை வெளியிட்டு வந்தது. அண்மையில் இலங்கை அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்ட லங்கா நியூஸ் வெப் இணையத்தளம் இதுதொடர்பான நான்கு செய்திகளை வெளியிட்டிருந்தது. ராஜூ மற்றும் சிந்து குறித்து ஆசிரியர் தலையங்கங்களை எழுதுவதைவிட மிகவும் மனிதநேய விடயங்களை எழுப்பிய ஒரு செய்தியும் வெளியாகியிருந்தது. தமிழ் மொழியில் வெளியாகும் தினக்குரல் பத்திரிகை, இரண்டு யானைக்குட்டிகளும், வவுனியா முகாம் மக்களும் என்ற தலைப்பில் அந்தச் செய்தியை வெளியிட்டிருந்தது. வார இறுதி சிங்கள மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகள், இந்த முகாம்களில் வாழ்கின்ற மக்களின் பிரச்சினைகள் குறித்து எந்தவிதமான சிறப்புக் கட்டுரைகளையும் வெளியிடவில்லை.

உலகில் மிகவும் போற்றத்தக்க இலங்கைத் தீவில் 300,000 மக்கள் இரண்டு மாதங்களுக்கு மேலாக தமது விருப்பத்திற்கு மாறாக, அகதிமுகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருப்பது இரகசியமான விடயமல்ல. குறைந்தது இந்த மக்கள் மேலும் ஆறு, ஏழு மாதங்கள் அல்லது ஒரு வருடத்திற்கு மேலாக இந்த முகாம்களில் தடுத்துவைக்கப்படலாம். இந்த முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களின் நிலைமைகள் குறித்து ஜனாதிபதியின் ஆலோசகர் வாசுதேவ நாணயக்கார மற்றும் அரசாங்கத்தின் தமிழ் அரசியல்வாதியான ஆனந்தசங்கரி ஆகியோரின் பார்வையில் நோக்கும்போது மிகவும் கவலைக்குரியதாகும்.

முன்னாள் நீதியரசரின் கருத்துக்களுக்கமைய சட்டத்தின் உதவியின்றிய மக்கள், ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் கருத்துபடி, உலகில் எங்குமே காணமுடியாத மிகவும் கவலைக்குரிய நிலைமையாகும். இந்த மக்கள் தொற்று நோய்களினால் பெரும் அல்லலுற்று வருகின்றனர். அம்மை நோயினால் 5,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கண் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எவருக்குமே தெரியாது. அவர்களுக்குப் போதுமான சுகாதார வசதிகள் கிடைப்பதில்லை. குளிப்பதற்கும், ஆடைகளைத் துவைப்பதற்கும் போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை. 100 மலசல கூடங்களே முகாம்களில் இருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் மேலாக பேசும் உரிமையும், விரும்பிய இடத்திற்கு செல்லும் சுதந்திரமும் அவர்களுக்கு இல்லை. இவ்வாறு பாதிக்கப்பட்டிருப்பது எமது நாட்டு மக்களின் ஒருபகுதியினரே.

ராஜூ மற்றும் சிந்து தொடர்பான பிரச்சினையை தேசிய முக்கியத்துவமிக்க பிரச்சினையாக மாற்றிய இலங்கையின் சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் மூன்று லட்சம் மக்களின் பிரச்சினையை முழுமையாக மறந்துபோயுள்ளனர். ராஜூ மற்றும் சிந்துவின் உரிமைகளுக்காக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளுக்கு ஊடகங்கள் வழங்கிய பிரச்சாரம் மூன்று லட்சம் மக்களின் உரிமைகளுக்காக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக வழங்கியனவா? அவ்வாறான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதை இந்த ஊடகங்கள் அறிந்துள்ளனவா? இந்த இரண்டு யானைக் குட்டிகளின் உரிமைகளுக்காக ஆயிரக் கணக்கான வார்த்தைகளில் சிறப்புக் கட்டுரைகளை வெளியிட்ட பத்திரிகைகள் இந்த மூன்று லட்சம் மக்களின் உரிமைகள் தொடர்பாக எழுதிய கட்டுரைகள் எவையும் காணமுடிந்ததா?

ராஜூ மற்றும் சிந்து ஆகிய யானைக் குட்டிகளின் மனதை உருக்கும் புகைப்படங்கள் அனைத்துப் பத்திரிகைகளிலும் வெளியாகின. வவுனியாவில் முகாம்களில் இருக்கின்றன சுமார் 40,000 பிள்ளைகளின் துயரங்களின் ஒரு புகைப்படம், அந்தக் குழந்தைகளின் உரிமைகள் குறித்து எழுதிய ஒரு கட்டுரையேனும் இந்தப் பத்திரிகைகள் வெளியிட்டதை நீங்கள் பார்த்துள்ளீர்களா? இந்தக் குழந்தைகளின் உரிமைகளுக்காக நீதிமன்றத்திற்குச் சென்ற ஒரு சிறுவர் உரிமை அமைப்பேனும் இருக்கின்றதா?

இந்த முகாமில் இருந்தவர்களில் 50,000 பேர் சட்டவிரோதமாக வெளியேற்றப்பட்டிருப்பதாக அரசாங்கத்திற்குச் சார்பான தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியதாக கடந்த தினங்களில் செய்திகள் வெளியாகியிருந்ததை நீங்கள் அறிந்துள்ளீர்களா? அப்படியெனில் இந்த முகாமிற்குக் கொண்டுவரப்பட்டவர்களில் 50,000 பேர் அங்கு இல்லை. இந்த மக்களை 500,000 ரூபா முதல் 1,000,000 ரூபாவை பணத்தை லஞ்சமாகப் பெற்றுக்கொண்டு அவர்களை முகாமிலிருந்து அரசாங்கத்துடன் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியே வெளியேற்றியுள்ளதாக அந்த நாடாளுமன்ற உறுப்பினர் கூறியிருப்பதை நீங்கள் அறிந்துள்ளீர்களா?

முகாம்களிலுள்ள இந்த மக்களில் 80 வீதமானவர்களை நவம்பர் மாதம் இறுதிக்கு முன்னர் மீண்டும் குடியேற்றப் போவதாக அரசாங்கம் உலகத்திற்கு உறுதிமொழியளித்திருப்பதை நீங்கள் அறிந்துள்ளீர்களா? இந்த மக்களில் 20,000 பேர், அதாவது 15 பேரில் ஒருவர் புலிகளின் ஆதரவாளர்கள் என அரசாங்கம் கூறியிருப்பதை நீங்கள் அறிந்துள்ளீர்களா? இதனைத் தவிர, ஏற்கனவே 10,000 பேர் விடுதலைப் புலிகளின் சந்தேக நபர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதை நீங்கள் அறிந்துள்ளீர்களா? இந்த எண்ணிக்கையானது யுத்தத்தில் படையினரால் கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட 22,000 விடுதலைப் புலிகளின் போராளிகளுக்கு மேலதிகமான எண்ணிக்கை என்பதையும் நீங்கள் அறிந்துள்ளீர்களா?

எமக்கு தேவையான, இந்த நாளில் மிக முக்கியமான கலந்தாய்விற்கு உட்படுத்தப்பட வேண்டிய விடயம் இதுவாகும். எனினும், சுய தணிக்கையின் மூலம் இந்த கலந்தாய்வு மழுங்கடிக்கப்பட்டுள்ளது. இதனால் நாங்கள் யானைக் குட்டிகள் குறித்தும் தாய் யானைகள் குறித்தும் பேசிக்கொண்டிருப்போம்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.