கே.பி யை விசாரிக்க சர்வதேச புலனாய்வுத்துறை அதிகாரிகள் சிறீலங்கா வருகை – கெஹலிய

keheliya250pxதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேசப் பொறுப்பாளரும், புதிய தலைவருமான குமரன் பத்மநாதனிடம் விசாரணை நடத்துவதற்காக இந்தியாவின் றோ புலனாய்வுப் பிரிவின் நான்கு அதிகாரிகள் அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இலங்கை பாதுகாப்புத் தரப்பினரால் கைது செய்யப்பட்டுள்ள கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனை விசாரிப்பதற்காக அமெரிக்கா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த உளவுப் பிரிவினர் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். எனவே அவர்களது கோரிக்கைகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர்களுக்கும் சந்தர்ப்பங்கள் அளிக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள பயங்கரவாதத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நாடுகளைச் சேர்ந்த உளவுப் பிரிவினரே இந்த வேண்டுகோளை முன் வைத்துள்ளனர். உலகப் பிரசித்தி பெற்றுள்ள பயங்கரவாத அமைப்புக்களினால் மேற்கொள்ளப்படும் கடல் மார்க்கமான ஆயுதக் கடத்தல்கள் தொடர்பான விடயங்கள் கே.பி.யிடம் உள்ளதாக சர்வதேச புலனாய்வுப் பிரிவுகள் நம்புகின்றன. அந்தவகையில் அமெரிக்காவின் சி.ஐ.ஏ, ரஸ்யாவின் கே.ஜீ.பி, அமெரிக்காவின் பயங்கரவாத விசாரணைப் பிரிவான பெடரல் பணியகம், பிரித்தானியாவின் எம்.ஐ 5, இஸ்ரேலின் மொசாட், சீனாவின் அரசாங்க புலனாய்வுப் பிரிவு போன்றவையே இந்த வேண்டுகோளை முன் வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கே.பியைத் தம்மிடம் ஒப்படைக்குமாறு இந்தியா அண்மையில் அரசாங்கத்திடம் கேட்டிருந்தது. ஆயினும் அரசாங்கம் அதற்கு மறுப்புத் தெரிவித்து இந்தியாவை இலங்கைக்கு அழைத்திருந்தது. இதனையடுத்தே இந்தியாவின் றோ புலனாய்வுப் பிரிவினர் அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளனர். இந்த விசாரணைகளின் போது இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை தொடர்பிலும் கவனம் செலுத்தப்படுமென எதிர் பார்ப்பதாகவும் கெஹெலிய ரம்புக்வெல மேலும் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.