கே.பி. எங்கள் ஹோட்டலில் வைத்து கைதானமைக்கான அறிகுறிகள் இல்லை: மறுக்கும் ஹோட்டல் நிர்வாக உறுப்பினர்

tune hotel malaysiaவிடுதலைப் புலிகளின் புதிய தலைவரான கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன், தமது ஹோட்டலில் வைத்து கைது செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரிலுள்ள ரியூண் ஹோட்டலின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பத்மநாதன, மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலுள்ள ரியூன் ஹேட்டலில் விடுதலைப்புலிகளின் உயர் அதிகாரி ஒருவரின் உறவினர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த போது அவரது கைத்தொலைபேசியில் அவருக்கு அழைப்பு வந்ததாக பரவலாக செய்திகள் வெளியாகின. அவர் தொலைபேசியல் பேசிக்கொண்டே வெளியே வந்த போது அங்கு காத்திருந்த புலனாய்வு அதிகாரிகள் அவரைக் கைதுசெய்ததாக விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்களை மேற்கோள்காட்டி முன்னர் செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்த விவகாரம் குறித்து உண்மை நிலையை அறிந்து கொள்வதற்காக தாங்கள் நடத்திய சொந்த விசாரணையிலும் சரி தங்கள் சீ.சீ.ரீ.வி. வீடியோ கமெராக்களிலும் சரி பத்மநாதன் ஹோட்டலுக்கு வந்து சென்றதாகவோ அங்கு கைது செய்யப்பட்டதாகவோ எதுவித அறிகுறிகளையும் காணவில்லை என்று ரியூன் ஹோட்டல் பொதுஜன உறவு மற்றும் சந்தைப்படுத்தல், தொடர்பாடல் முகாமையாளர் பினேஷ் விறாஜ்லால் தெரிவித்தார்“. ஹேட்டலின் சீ.சீ.ரீ.வி. கமெரா கட்டமைப்பில், குறிப்பிட்ட காலப் பகுதியில் பத்மநாதனின் உருவ அமைப்பைக் கொண்ட எவரது நிழற்படமும் விழுந்திருக்கவில்லை என்றும் முகாமையாளர் மேலும் தெரிவித்தார். கோலாலம்பூரிலுள்ள ஏனைய ஹேட்டல்களுடன் ஒப்பிடுகையில் தங்கள் ஹேட்டலில் அதிக எண்ணிக்கையான சீ.சீ.ரீ.வி. கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கோலாலம்பூர் ரியூன் ஹோட்டலில் வாகன தரிப்பிடம் இல்லாததால் கே.பி ஹேட்டல் வளவுக்குள் எங்கு வைத்தேனும் கைது செய்யப்பட வாய்ப்பில்லை என்றும் விராஜ்லால் கூறினார்.

கே.பி. தங்கள் ஹோட்டலுக்குள் இல்லை என்பது மலேசிய அரசாங்கத்திற்கு தெரியுமாதலால் அதிகாரிகள் தங்களிடம் அது பற்றி விசாரிக்கவில்லை என்றும் அவர் கூறினார். மலேசிய பொலிஸாரோ அரசாங்கமோ இந்த விவகாரம் தொடர்பாக ஹேட்டலுடன் தொடர்பு கொள்ளவில்லை என்றும் கே.பி இந்த ஹோட்டலில் வைத்து கைது செய்யப்பட்டதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானதால் உள்ளக விசாரணையை தாங்கள் மேற்கொண்டதாகவும் அவர் மேலும் கூறினார். பத்திரிகைகளில் கடந்த வாரம் செய்தி வெளியாகும் வரை ஹேட்டல் ஊழியர்களுக்கு இந்த விவகாரம் குறித்து எதுவும் தெரியாதெனவும் அவர் கூறினார். கே.பி. தமது உண்மையான பெயரை பயன்படுத்தி இருக்க மாட்டாரென்பது தங்களுக்கு தெரியும் என்றும் ஆனால் பத்திரிகைகளில் வெளியான அவரது உருவப்படத்தை அடிப்படையாக வைத்துப் பார்த்த போதும் அத்தகைய நபர் எவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் தெரியவந்ததாக விராஜ்லால் சொன்னார்.

கே.பி தானாகச் சரணடைந்தாரா?

கே.பி. கைதுசெய்யப்பட்டாரா அல்லது தானாகச் சரணடைந்தாரா என்பது குறித்த சந்தேகம் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் தோன்றியுள்ளது என இணையத்தளச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மலேஷியா, தாய்லாந்து அதிகாரிகள் தமது நாடுகளில் கே.பி.கைது செய்யப்படவில்லை எனத் தெரிவித்துள்ளமையே இந்த சந்தேகங்களுக்கான முக்கிய காரணமாகவுள்ளது என்று சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது.

மேலும் கே.பி. கைது செய்யப்பட வேண்டும் என இந்தியாவே அதிக அக்கறை காட்டியதுடன் “இன்ரர்போல்” ஊடாக பிடியாணையும் பிறப்பித்திருந்தது. இதன் காரணமாகத் தாய்லாந்து அல்லது மலேஷிய அதிகாரிகள் கே.பியைக் கைதுசெய்து இந்தியாவுக்குத் தெரியாமல் இலங்கையிடம் ஒப்படைப்பதற்கு வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, பல உயர்மட்ட அரச தலைவர்களுக்கும் கே.பிக்கும் இடையிலான தொடர் தொலைபேசி உரையாடலின் பின்னர் ஏற்பட்ட இணக்கப்பாட்டையடுத்து கே.பி.தானாக முன்வந்து சரணடைந்தார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கே.பி. எவ்வாறு கைது செய்யப்பட்டார், இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டார் என்ற விடயத்தை இலங்கை அரசுபகிரங்கப்படுத்த மறுப்பதும் கே.பி. சரணடைந்தாரா என்ற சந்தேகத்தை வலுப்படுத்துகின்றது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. என அந்த இணையத்தளச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.