தடுப்பு முகாம்களிலுள்ளவர்களை உடன் விடுவிக்கக்கோரி நெதர்லாந்தில் பல்லினமக்களிடம் கையெழுத்துச் சேகரிப்பு

தாயகத்தில் போர் முடிவடைந்துவிட்டாலும், பல தடுப்பு முகாம்களில் 3 மாத காலத்திற்கும் மேலாக அப்பாவித் தமிழ் மக்கள் சிங்கள அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை இன்னும் நீண்ட காலத்திற்கு தடுத்து வைப்பதற்குரிய அறிகுறிகளே சிங்கள அரசாலும் அதன் அமைச்சர்களாலும் இன்று தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்த மக்களை பார்வையிடவோ உதவிசெய்யவோ எந்தவொரு உள்ளுர், சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களிற்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. ஒருகுறுகிய நிலப்பரப்பில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 3 இலட்சம் மக்களிற்கான குடிநீர், உணவு, உடை, கழிப்பிடங்கள், ,மருத்துவ வசதிகள் போன்ற அடிப்படை மனிதாபிமான வசதிகள் போதுமான அளவு இல்லாமையாலும் தொற்று நோய்களாலும் நாளாந்தம் பலர் இறந்த வண்ணம் உள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கான சிறுவர்கள், இளையோர்கள் உட்பட பலர் அவர்களின் சொந்தக் குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டு தனியான முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுகின்றனர். இவர்களை பார்வையிடுவதற்கும் பெற்றோர்கள், உறவினர்கள் உட்பட அரசார்பற்ற நிறுவனங்களிற்கும் சிங்கள அரசால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

எனவே, சர்வதேச மனித உரிமைச் சட்டங்களிற்கெதிராக அடைத்து வைக்கப்பட்டுள்ள இம்மக்களை விடுவிக்கக்கோரி பலசர்வதேச அமைப்புக்கள் குரல் கொடுத்தும் சிங்கள அரசு தொடர்ந்தும் அவற்றை உதாசீனம் செய்துவருகின்றது.

இந்நிலையில், இம்மக்களை விடுவிக்க உடனடியாக கவனமெடுக்குமாறு கோரி நெதர்லாந்தின் அனைத்து மாநிலங்களிலுமுள்ள பல நகரங்கள், கிராமங்களில் இத்தடுப்பு முகாம்கள்பற்றி விளக்கி பல்லின மக்களிடம் தொடர்ந்து ஒரு மாத காலத்திற்கு கையெழுத்துச் சேகரிப்பை பெறுவதற்கு நெதர்லாந்தின் தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பு முடிவுசெய்துள்ளது.

சேகரிக்கப்பட்ட இக்கையெழுத்துக்கள் நெதர்லாந்தின் வெளிநாட்டமைச்சு உட்பட அனைத்து அமைச்சர்கள், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், அனைத்துக்கட்சிகள், நெதர்லாந்தின் அனைத்து ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்கள், நெதர்லாந்திலுள்ள அனைத்து வெளிநாட்டுத் தூதுவர்கள், அனைத்து மனித உரிமை அமைப்புக்களிற்கும் நேரடியாகவும் தபால் மூலமும் கையளிக்கப்படவுள்ளன.

எம்மக்களை விடுவிக்க ஒரு மாதகாலம் நடைபெறவிருக்கும் இக் கையெழுத்துச் சேகரிப்பில் ஈடுபட விருப்பமுள்ளவர்கள் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மேலதிக தொடர்புகட்கு: 0649343746
Email: Fto.nld@gmail.com
தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பு – நெதர்லாந்து

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.