திரு. செ.பத்மநாதன் கடத்தல் – எல்லை கடந்த இலங்கை அரசின் பயங்கரவாதம் – பிரித்தானிய தமிழர் பேரவை

பிரித்தானிய தமிழர் பேரவை சிறீலங்கா அரசு செ.பத்மநாதன் அவர்களை கடத்தியமையானது எல்லை கடந்த பயங்கரவாதம் என குற்றம்சாட்டி ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.

அவ்வறிக்கையின் முழுவிபரம் பின்வருமாறு:


ஊடக அறிக்கை பிரித்தானிய தமிழர் பேரவை.
திரு. செ.பத்மநாதன் கடத்தல் – எல்லை கடந்த இலங்கை அரசின் பயங்கரவாதம்.

இலங்கை பேரினவாத அரசானது சனநாயக அரசு என்ற கவசத்தை அணிந்துகொண்டு , தமிழ் மக்களின் மீது கட்டவிழ்த்து விட்டிருக்கும் சட்டவிரோத ஆட்கடத்தல் , காணாமல்போதல் முதலாய மனித உரிமை மீறல்களை தற்போது எல்லைகடந்து சர்வதேச ரீதியில் நிகழ்தத் தொடங்கியுள்ளது.

சர்வதேச சட்டங்களையும் , நியதிகளையும் மதிக்காது இலங்கையில் செயற்படுகின்ற இலங்கை இராணுவ நிர்வாகம் தற்போது அதனை சர்வதேச ரீதியில் நடாத்துவதற்கும் அனுமதிக்கப்பட்டிருக்கின்றது போலும்.

திரு. செல்வராசா பத்மநாதன் கடத்தல் தொடர்பாக வெளியாகியுள்ள செய்திகள் , இலங்கை அரசு சர்வதேச நியமங்களை புறந்தள்ளி செயற்படுகின்றது என்பதனைக் காட்டுகின்றது.

சட்டவிரோதமாகக் கடத்தப்பட்ட திரு. பத்மநாதன் அதே விதமாக ஒரு நாட்டிலிருந்து இன்னுமொரு நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டவிதம் ஜனநாயகத்தை நேசிப்பவர்களால் வெறுக்கத்தக்கதோடு சட்டத்தின்முன் நிறுத்தப்படவேண்டியதுமாகும். இவ்வாறான நாடுகடத்தல்கள் ஐக்கிய நாடுகாள் சபையின் சித்திரவதைகளுக்கெதிரான பிரகடனத்தின் 3ம் பிரிவிற்கு முரணானது.

ஐக்கிய நாடுகள் சபை , பொதுநலவாய நாடுகள் முதலாய சர்வதேச சமூகத்தின் பாராமுகமானது இவ்வாறான பட்டப்பகல் கடத்தல்கள் சர்வதேசத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடவடிக்கையாக மேலும் தொடர்வதற்கு வழிவகுக்கும்.
அப்படி ஏற்படின் சர்வதேச நியமங்களும் , சட்டங்களும் , பிரகடனங்களும் மீண்டும் ஒருமுறை எழுதவேண்டி நேரிடும்.

ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலைத் திட்டத்திற்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவை மிகவும் சாமர்த்தியமாக பெற்றுக்கொள்கின்றது இலங்கை அரசு. தொடர்ந்தும் சர்வதேசத்தின் அழுத்தங்களைப் புறந்தள்ளி 300,000க்கும் அதிகமான மக்களை நாசிகளின் வதைமுகாங்களுக்கொப்பான முகாங்களில் அடைத்துவைத்துள்ளது.

மிகவும் பொறுப்பு வாய்ந்த சர்வதேச ஊடகங்கள் நடந்த சட்டவிரோதக் கடத்தலுக்கு நீதி கேட்காமையும் இவ்விடயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமையும் கவலை அளிக்கின்றது.

தமிழர்கள் மீது சுமத்தப்பட்ட ஆயுதப்போராட்டத்தை நிறுத்தி , ஆயுதங்களுக்கு ஓய்வுகொடுத்து , இப்போராட்டத்தை அகிம்சாவழிபோராட்டமாக உருமாற்றம் செய்வதற்கு திரு. பத்மநாதன் அவர்களின் பங்கும் பிரசன்னமும் மிகவும் முக்கியமானது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முழுமையான அகிம்சாவழிப்போராட்டமாக முன்னெடுக்க முனையும் மிதவாதத்தலைவரை அப்புறப்படுத்துவதானது , இலங்கை அரசின் அரச பயங்கரவாதத்தை தூண்டுவதோடு , அதி தீவிர சக்திகளின் செல்வாக்கை மேலோங்கச் செய்ய வழிவகுப்பதாயும் அமைந்துவிடும்.

திரு. பத்மநாதன் அவர்கள் தாம் வாழும் நாட்டின் சட்டங்களையோ அல்லது சர்வதேச சட்டங்களையோ மீறி செயற்பட்டிருந்தால் அவர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு மிகவும் வெளிப்படைத் தன்மையோடும் , சர்வதேச நியமங்களுக்கு அமைவாகவும் விசாரனைகள் நடாத்தப்பட வேண்டும்.

திரு. பத்மநாதன் அவர்கள் ஒரு நாட்டின் பிரஜா உரிமை பெற்றவர் என்ற அடிப்படையில் அவர் வாழும் நாட்டுமக்கள் தமது நாட்டின் சட்டதிட்டங்களுக்கு எதிராக ஒருவர் கடத்தப்படும் போது அதற்கு எதிராக பகிரங்கமான விசாரணை நடாத்தக் கோருவதற்கு உரிமையுடையவராவார்கள்.

அண்மையில் , துன்புறுத்தலுக்கும் தடுத்துவைத்தலுக்கும் எதிரான பிரித்தானியாவின் அர்ப்பணிப்பு குறித்து கேள்வி எழுந்த போது வெளிவிவகாரச் செயலர் திரு.டேவிட் மிலிபாண்ட் அவர்கள் பிரித்தானியாவின் அர்ப்பணிப்பை மீண்டும் ஒருமுறை உறுதி செய்தார். இது பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில்க்கூட மக்கள் துன்புறுத்தப்படக் கூடாது என்ற பிரித்தானிய மக்களின் விருப்பபை பிரதிபலிக்கின்றது.

அவ்வாறிருக்க , பொதுநலவாயத்திலிருந்து ஒரு நாட்டை அகற்ற வேண்டுமாயின் அந்நாட்டில் ஜனநாயகம் நடைமுறையில் இல்லை என்ற நிலை வந்தால் மட்டுமே சாத்தியமாகும், அவ்வாறான குற்றச்சாட்டு இலங்கை மீது இல்லை என வாதிடுகின்றது பிரித்தானிய பிரதமர் அலுவலகம். அனைவரும் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் எனும் நிலை வரும் போதுதான் சட்டம் ஒழுங்கு சீரான முறையில் நடைமுறைப்படுத்தப்படும்.

இவ்வாறான விசாரணைக்கு , முன் உதாரணம் இல்லை என்ற காரணத்தினால் சர்வதேச சட்டங்களை மீறிய குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பிப்பதனை அனுமதிக்க முடியாது.

மேற்கூறிய விடயங்களைக் கருத்திற்கொண்டு பிரித்தானிய தமிழ் மக்கள் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கின்றனர் :

1. திரு. செ.பத்மநாதன் அவர்கள் உடனடியாக நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு , அவர்மீது குற்றம் ஏதும் சாட்டப்படின் நீதியான ,முறைப்படியான விசாரனைகளை நடத்துவதற்கு , இலங்கை அரசிற்கு பிரித்தானிய அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

2. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் தொடர்ச்சியான முறையில் திரு. பத்மநாதன் அவர்களை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதோடு , சித்திரவதைகளுக்கு எதிரான சர்வதேச பிரகடனத்தை இலங்கை அரசு மதித்து நடக்க அழுத்தம் கொடுக்க வேண்டும்.

3. சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் திரு. பத்மநாதன் அவர்கள் சட்ட ஆலோசனையைப் பெற அனுமதிக்கப்பட வேண்டும்.

4. இச்சட்ட விரோத ஆட்கடத்தலில் ஈடுபட்ட அரசு அல்லது அரசுகள் , அமைப்புக்கள் அனைத்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

5. பொதுநலவாயத்தில் , சர்வதேச சட்டங்களை மீறும் உறுப்பு நாடுகளை இடைநிறுத்துவதற்கு ஆதரவு வழங்கும் தமது கொள்கையை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு மீள் பரிசீலனை செய்ய வேண்டும். இக்கொள்கை சர்வதேச சட்டத்தை மீறும் நாடுகள் தண்டனையில் இருந்து தப்பிப்பதற்கு வழிவகுக்கக் கூடாது.

6. இவ்வாறாக ஒரு நாட்டு அரசானது சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் போது அதனை வெளிக்கொணர ஊடகங்கள் முன்வரவேண்டும்.

நன்றி
பிரித்தானிய தமிழர் பேரவை

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.