மட்டக்களப்பில் விடுதலைப் புலி சந்தேக நபர் வாவியில் மூழ்கி பலி

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் அவசர கால சட்ட விதிகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலி சந்தேக நபர் ஒருவர் நேற்று மாலை வாவியில் மூழ்கி பலியாகியுள்ளார்.

பாவற்கொடிச்சேனையைச் சேர்ந்த அப்பு எனப்படும் 28 வயதான குணரத்தினம் விமல்ராஜ் என்ற குறிப்பிட்ட சந்தேக நபர் பொலிசாரிடம் சில நாட்களுக்கு முன் சரணடைந்திருந்ததாகக் கூறப்படுகின்றது.

இவர் கொடுத்த தகவலின் பேரில் ரி 56 ரக துப்பாக்கி உட்பட சில ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டன. மேலும் விசாரணைகளின் போது தெரிவிக்கப்பட்ட தகவல்களின் பேரில் மாந்தீவு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் ஆயுதங்களைக் கண்டு பிடிப்பதற்காக இவர் வள்ளத்தில் அழைத்துச் செல்லப்பட்டார். அவ்வேளை வாவிக்குள் பாய முற்பட்டபோது வள்ளம் கவிழ்ந்து இவர் நீரில் மூழ்கி பலியானதாகப் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இவரைக் காப்பாற்ற முயன்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் நீரில் மூழ்கிய போதிலும் அவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.