இராணுவ மயமாக்கப்படும் தமிழர் தாயகப் பிரதேசங்கள் – கபிலன்

NILAVARAM-150தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகமான இலங்கையின் வட-கிழக்குப் பிரதேசத்தை இராணுவ மயப்படுத்துவதற்கு வித்திட்ட ஒருவர் கடந்த 12ம் திகதி மரணமாகியிருக்கிறார்.

இலங்கையின் பத்தாவது இராணுவத் தளபதியாக இருந்தவரும், வட-கிழக்கு மாகாணத்தின் முதலாவது ஆளுனருமான ஜெனரல் நளின் செனிவிரத்னவே அவர்.
78வது வயதில் காலமாகியுள்ள அவர், முதலாம் கட்ட ஈழப்போர் காலத்தில்- புலிகளுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில், ஆயிரக்கணக்கான தமிழ்மக்களின் படுகொலைகளுக்குப் பொறுப்பாக இருந்தவர்.

1983 ஜுலை இனக்கலவரத்துக்குப் பின்னர்- 1984 ஜனவரியில் யாழ்ப்பாணத்தில் இருந்த படைகளுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்ட ஜெனரல் நளின் செனிவிரத்ன, 1985ம் ஆண்டு இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்றார்.

ஜெனரல் திஸ்ஸ வீரதுங்கவிடம் இருந்து இராணுவத் தளபதி பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்ட இவர், 1988ம் ஆண்டு ஜெனரல் ஹமில்டன் வணசிங்கவிடம் அதை ஒப்படைக்கும் இந்தப் பதவியில் இருந்தவர்.

1988இல் ஓய்வுபெற்ற பின்னர், வட-கிழக்கு மாகாணத்தின் முதலாவது ஆளுனராக ஜே.ஆர் ஜெயவர்த்தனவினால் நியமிக்கப்பட்டார்.

ஜெனரல் நளின் செனிவிரத்ன தமிழ்மக்களுக்கு எதிரான போரில்- தமிழரின் தாயகத்தை கூறுபோடும் முயற்சிகளில், தமிழ்மக்கள் இனப்படுகொலைகளுக்கு உள்ளாக்கபட்டதில்- வடகிழக்கு பிரதேசத்தை இராணுவ மயப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்த ஒருவர்.
அதுமட்டுமன்றி, இராணுவத்தில் இருந்த காலத்தில் நேரடியாக தமிழ்மக்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்ட இவர், ஆளுனரான பின்னர் தமிழ்மக்களை சட்டரீதியாக அடக்கி ஆளுகின்ற முயற்சியின் ஆணிவேராகவும் திகழ்ந்தவர்.

வட-கிழக்கு மாகாணசபை 1988ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த மாகாணசபை உருவாக்கப்பட்டு இப்போது 21 வருடங்களாகி விட்டன.

இந்த 21 வருடங்களில் ஆக, ஒன்றரை வருடங்கள் மட்டுமே, ஈபிஆர்எல்எவ்வின் நிர்வாகத்தின் கீழ் இருந்தது.

எஞ்சிய காலம் முழுவதுமே ஜனாதிபதியின் நேரடிக் கட்டுப்பாட்டில் -ஆளுனரின் ஆட்சியில் தான் இருந்து வருகிறது.

இந்த மாகாணசபை உருவாக்கப்பட்ட பின்னர்- ஆளுனர்களாக நியமிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் படைத்துறை சார்ந்த அதிகாரிகளாகவே இருந்தனர்.

இப்போதும் கூட அதே நிலை தான் காணப்படுகிறது.
வட-கிழக்கில் படைத்துறை சார் அதிகாரிகளை ஆளுனர்களாக நியமித்து- அங்கு இராணுவ ஆட்சியை நடத்த்தும் இலங்கை அரசின் நடவடிக்கைகளுக்குப் ‘பிள்ளையார் சுழி’ போட்டவர் ஜெனரல் நளின் செனிவிரத்ன தான்.

வட-கிழக்கின் முதலாவது ஆளுனராக நியமிக்கப்பட்ட பின்னர்- நடிகர் காமினி பொன்சேகா, லயனல் பெர்னான்டோ மற்றும் டிக்சன் டீல பண்டார ஆகியோரைத் தவிர ஏனைய ஆளுனர்கள் அனைவருமே படைத்துறை சார் அதிகாரிகளாகவே இருந்துள்ளனர்.

ஓன்றில் முன்னாள் இராணுவத் தளபதியாக அல்லது முன்னாள் கடற்படைத் தளபதியாக, அல்லது முன்னாள் பொலிஸ்மா அதிபராக இருந்தவர்கள் தான் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

இலங்கையின் வேறெந்த மாகாணத்துக்குமே படையதிகாரிகளை ஆளுனர்களாக அரசாங்கம் நியமிக்கவில்லை.

ஆனால் வட-கிழக்குக்கு மட்டும் தொடர்ச்சியாக படைஅதிகாரிகள் தான் ஆளுனர்களாக நியமிக்கப்படுகின்றனர்.

அண்மையல் கூட டிக்சன் டீல பண்டாரவை நீக்கி விட்டு, வடக்கு மாகாண ஆளுனராக அரசாங்கம் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியை நியமித்திருந்தது.

அதுபோன்றே, கிழக்கு ஆளுனராக இப்போதும் கடமையில் இருப்பவர் முன்னாள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் மொகான் விஜேவிக்கிரம தான்.

இந்த மாகாணங்களின் சிவில் நிர்வாகங்களில் ஆளுனர்களே அதிக ஆதிக்கத்தைச் செலுத்துகின்றனர்.

கிழக்கு மாகாணசபையை அரசாங்கத்தோடு அண்டிப் பிழைக்கும் சந்திரகாந்தன் (பிள்ளையான்) தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கைப்பற்றிய போதும்- ஆளுனர் மொகான் விஜேவிக்கிரம தான் உண்மையில் ஆட்சியை நடத்துகிறார்.
காணி அதிகாரம் இல்லை. பொலிஸ் அதிகாரம் இல்லை. நிதி அதிகாரங்களும் கிடையாது. ஏதோ பெயருக்கு முதலமைச்சராக இருந்து கொண்டு பிள்ளையான் ஆட்சியை நடத்துகிறார்.

கந்தளாய் பகுதியில் 1500 ஏக்கர் நிலத்தை வாழைப் பயிர்ச்செய்கைக்காக வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கு கிழக்கு மாகாணசபையின் அஙகீகாரமின்றியே, ஆளுனர் வழங்கியிருந்தார்.

அண்மையில் இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது நினைவிருக்கலாம்.
அரச நிர்வாகத்தில்- அதுவும் தமிழ்மக்களை நிர்வாக ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ தலையெடுக்க முடியாதபடி- அழுத்தி வைத்திருக்கின்ற பணியைத் தான் வட-கிழக்கின் ஆளுனர்கள் செய்து வந்திருக்கிறார்கள்.

வட-கிழக்கை இராணுவ மயப்படுத்தி அதை முழுமையான இராணுவ ஆட்சியின் கீழ் வைத்திருப்பது தான் சிங்கள அரசின் திட்டம்.

இந்தத் திட்டங்களையே ஜெனரல் நளின் செனிவிரத்ன தொடக்கம் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி வரைக்கும் பதவியில் இருந்த ஆளுனர்கள்; அனைவரும் நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்த பின்னர்- வடக்கை இராணுவ மயப்படுத்தும் திட்டங்களே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சில வாரங்களுக்கு முன்னர் தென்னிலங்கைப் பத்திரிகைகளில் ஒரு செய்தி முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரமாகியிருந்தது.

வன்னியில் மாங்குளம், முல்லைத்தீவு, கிளிநொச்சி நகரங்களுக்கான மின்சார இணைப்புகள் வழங்கப்பட்டு மின்விநியோகம் வழங்கப்படுவதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டிருந்தது.

துரித கதியில் மின்சார சபை இந்தப் பணியை பூர்த்தி செய்திருக்கிறதாம்.
இது யாருக்காக இந்த மின்சார விநியோகம்? வன்னியில் பொதுமக்களில் ஒருவர் கூட இல்லாத நிலையில் அங்கு எதற்கு மின்சாரம்?

வன்னியில் இருந்த மக்களை வெளியேற்றி- முகாம்களுக்குள் அடைத்து வைத்துக் கொண்டு, கிளிநொச்சிக்கும், மாங்குளத்துக்கும் மின்சாரம் வழங்குவதாக தம்பட்டம் அடிக்கிறது அரசாங்கம்.

இராணுவ நலனுக்காக- அவர்களின் தேவைகளுக்காக- மின்சாரத்தை வழங்கிவிட்டு, ஏதோ வன்னியில் வாழும் மக்களுக்காக செய்து கொடுத்தது போன்று பிரசாரத்தில் இறங்கியிருக்கிறது.

இந்த வருட இறுதிக்குள் ஓமந்தை வரை ரயில் சேவை நடக்கப் போகிறதாம். காங்கேசன்துறையில் இரந்து பளைக்கு ரயில் ஓடப் போகிறதாம்.

காங்கேசன்துறையிலோ, பளையிலோ ஓமந்தையிலோ பொதுமக்கள் வசிக்க அனுமதியில்லை. ஆனால் அங்கெல்லாம் ரயில் சேவை நடக்கப் போகிறதென்றால், அது யாருக்காக?

இந்தவாரம் வன்னியில் கைத்தொலைபேசி சேவைகளுக்கான இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாம். இதுவும் மற்றொரு பிரசாரம்.

ஆனையிறவு, கிளிநொச்சி, மாங்குளம், முல்லைத்தீவு அடங்கலான பகுதிகளுக்கு கைத்தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது தமிழ் மக்களுக்காகவா?
இது அங்கு நிலைகொண்டுள்ள படையினரின் நன்மைக்காகவே தவிர- பொதுமக்களுக்காக அல்ல.

இராணுவத்தினரின் தொலைத்தொடர்பு கோபுரங்களைப் பயன்படுத்தி வழங்கப்பட்டிருக்கின்ற இந்த இணைப்புகளின் மூலம் பயனடையப் போவது இராணுவத்தினர் தான்.

வடக்கில் வசந்தம் வீச ஆரம்பித்திருப்பதாகக் கூறிக் கொண்டு அரசாங்கம் தனது இராணுவ நலன்களை விஸ்தரித்து வருவதே உண்மை.

வன்னியின் கிழக்குப் பகுதிகளில் புலிகளுடனான போரில் இறந்த படையினருக்காக- நான்கு இடங்களில் பாரிய நினைவுச் சின்னங்களையும், பூங்காக்களையும் அமைக்கிறது அரசு.

முள்ளிவாய்க்கால், ஆனந்தபுரம், கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளில் இந்தப் போர் நினைவுப் பூங்காக்கள், மாவீரர் துயிலும் இல்லங்களின் கட்டுமானங்களைப் பெயர்த்தெடுத்தே அமைக்கப்படுகின்றன.

இது சிங்கள இராணுவ மேலாதிக்கத்தை தமிழ்மக்களின் மீது திணிக்கின்ற மற்றொரு முயற்சியாகும்.

அதுபோன்றே, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் பொலிஸ் நிலையங்கள், இராணுவத் தளங்கள், விமானப்படைத் தளங்கள் அமைக்கப்படுகின்றன.
வன்னியில் அமையும் 14 பொலிஸ் நிலையங்களுக்கு தலா 50 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டடங்கள், குடியிருப்புகள் அமைக்கப்படுகின்றன.

இது தவிர 300 ஏக்கர் நிலப்பரப்பில் பொலிஸ் பயிற்சிக் கல்லூரி அமைக்கப்படுகிறது.
முல்லைத்தீவிலும், கிளிநொச்சியிலும் அமைக்கப்பட்டுள்ள இரு படைத் தலைமையகங்களும், அவற்றின் கீழ் உள்ள டிவிசன் தலைமையகங்களும் பெரும் நிலப்பரப்பை விழுங்கி வருகின்றன.

இவை தவிர பிரிகேட் தளங்கள், பற்றாலியன் தளங்கள் என்பனவும் கணிசமான நிலப்பரப்பை உள்வாங்குகின்றன.

சிறிய முகாம்களை அமைக்க பொதுமக்களின் வீடுகள், கட்டடங்கள் தான் சுவீகரிக்கப்படுகின்றன.

இரணைமடுவிலும், முள்ளியவளையிலும் அமையப் போகும் விமானப்படைத் தளங்களுக்காக மிகப் பெரியளவு நிலப்பரப்பு தமிழ்மக்களிடம் இருந்து சூறையாடப்பட்டு வருகிறது.

ஜெட் போர் விமானங்களை தரையிறக்குவதற்கு மிக நீண்ட ஓடுபாதைகள் தேவை. தென்னிலங்கையில் இதற்கேற்ற வகையில் விமான நிலையங்களை விஸ்தரிக்க காணிகளைச் சுவீகரிப்பது கடினம். எதிர்ப்புகள் வரும்.

ஆனால் அரசு வடக்கில் தமிழரின் காணிகளைச் சுவீகரித்து விமானத்தளங்களை அமைத்து வருகிறது.

தமிழ்மக்களின் பாரம்பரிய தாயகப் பிரதேசங்கள்-இராணுவ மயப்படுத்தலுக்குட்பட்டு வருகின்றன.

வன்னியில் பாரம்பரியமாக தமிழ்மக்கள் வாழ்ந்து வந்த பிரதேசங்களில்- அவர்களின் காணிகளில் உருவாக்கப்படும் படைத்தளங்கள், படைக்கட்டுமானங்களை அரசு ஒருபோதும் விலக்கப் போவதில்லை.

அங்கு வாழ்ந்த மக்களை மீளக்குடியமர்த்தினால் இத்தகைய இராணுவ மயமாக்கல் மற்றும் காணிகள் சுவீகாரம் என்பனவற்றுக்கு எதிர்ப்புகள் கிளம்பும் என்பதாலேயே அவர்களை முகாம்களுக்குள் அடைத்து வைத்திருக்கிறது அரசாங்கம்.
அவசரகாலச் சட்டத்தைப் பயனபடுத்தி தமிழர்களின் பாரம்பரிய நிலங்களைச் சூறையாடுகின்றது சிங்கள அரசு.

1980 களின் தொடக்கத்தில் தமிழ்மக்களை விரட்டி விட்டு அமைக்கப்பட்ட வெலிஓயா சிங்களக் குடியயேற்றங்களில் இருந்து இடம்பெயர்ந்த சிங்களவர்களுக்குத் தான் வடக்கின் வசந்தத்தில் முன்னுரிமை.

சிங்களக் குடியேற்றவாசிகளுக்கு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்து, தென்னை பயிரிடும் காணிகள், தோட்டக் காணிகள் என்று தலா இரண்டரை ஏக்கர் நிலத்தையும் கொடுத்து மீளக் குடியேற்றி வருகிறது அரசாங்கம்.

இவையெல்லாம் சிங்கள அரசின் இராணுவ நிர்வாகத்தின் கீழ்- அதன் மேற்பார்வையில் நடந்தேறி வருகின்றன.

ஜெனரல் நளின் செனிவிரத்னவை ஆளுனராக நியமித்து- அவரூடாக ஆரம்பித்து வைக்கப்பட்ட இராணுவ மயமாக்கல் இன்று வரை தொடர்கிறது.

ஜெனரல் நளின் செனிவிரத்ன, யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைத்த தமிழ்மக்கள் மீதான படுகொலைகள், மனிதஉரமை மீறல்கள் இன்று வரை தொடர்கின்றன.
ஜெனரல் நளின் செனிவிரத்ன போன்ற இராணுவ அதிகாரிகள் சிங்கள மேலாதிக்கத்தை நிலை நாட்டுவதற்காக- தமிழர் பிரதேசத்தை சிங்கள மயப்டுதுவதற்காக கணிசமான பங்களிப்பைச் செய்திருக்கின்றனர்.

இந்த இராணுவ மயமாக்கலும் சிங்கள மயப்படுத்தலும்- ஜெனரல் நளின் செனிவிரத்ன போன்றோரின் மரணத்துக்குப் பின்னரும் தொடரத் தான் பேகின்றன.

புலிகள் இயக்கத்தின் இராணுவ வல்லமை அழிக்கப்பட்ட பின்னர்- இந்த அச்சம் தமிழ் மக்களிடம் இன்னும் மேலோங்கியிருக்கிறது.

ஜெனரல் நளின் செனிவிரத்ன

1953 ஜுலை 30இல் 2ம் லெப்டினன்ட் அதிகாரியாக இராணுவத்தில் இணைந்தார்.
1958இல் கப்டனாகவும், 1963இல் மேஜராகவும்,1971இல் லெப்.கேணலாகவும், 1977இல் கேணலாகவும், 1981இல் பிரிகேடியராகவும் பதவி உயர்வு பெற்றார்.

198இல் மேஜர் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்ட இவர், அதே வருடம் பெப்ரவரி 11ம் திகதி இலங்கை இராணுவத்தின் 10வது தளபதியாகப் பதவியேற்றார்.
இராணுவத் தளபதியாக இருக்கும் போது 1986 ஓகஸ்ட் 1ம் திகதி லெப்.ஜெனரலாகப் பதவி உயர்த்தப்பட்ட இவர், சேவையில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் 2007 ஒக்ரோபர் 1ம் திகதி ஜெனரலாகப் பதவி உயர்த்தப்பட்டார்.

முதலாம் கட்ட ஈழப்போர் காலத்தில் 54வது படைத் தலைமையகம் என்று அழைக்கப்பட்ட யாழ்.படைத் தலைமையகத்தின் தளபதியாக 1984 ஜனவரி 15ம் திகதி பொறுப்பேற்ற இவர் இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்கும் வரை இந்தப் பதவியை வகித்தார்.

1988 ஓகஸ்ட் 16ம் திகதி ஓய்வு பெற்ற இவர் வட-கிழக்கு மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டார்.

பொறியியல் படைப்பிரிவைச் சேர்ந்த இவர், யாழ் படைத் தளபதியாக நியமிக்கப்பட முன்னர், தொண்டர் படை என்று இப்போது அழைக்கப்படும் உதவிப் படைகளின் தளபதியாக 1982 நவம்பர் தொடக்கம் 1984 வரை பதவி வகித்திருந்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.