“யுத்தத்திலிருந்து தப்பிப்பிழைத்தோர் மழையிலிருந்து தப்புவதற்கு போராட்டம் நடத்த வேண்டிய நிலைமை’

யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் தப்பிப்பிழைத்த தமிழ்ப் பொதுமக்கள் இப்போது கடும் மழையால் உயிர்வாழ்வதற்கு மற்றொரு போராட்டத்தை நடத்தவேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

சுமார் 3 இலட்சம் இடம்பெயர்ந்த மக்கள் அரசாங்கத்தினால் நலன்புரி கிராமங்கள் என்று அழைக்கப்படும் இடங்களில் தங்கியுள்ளனர். இவர்களை சுயாதீன பத்திரிகையாளர்கள் சந்திப்பதற்கு இன்னமும் அனுமதி வழங்கப்படவில்லை.

“இதுவொரு மனிதாபிமானமற்ற விடயம் நரகத்தில் வாழ்வது போன்றது’ என்று தமிழ் அரசியல்வாதியான தர்மலிங்கம் சித்தார்த்தன் கூறியுள்ளார். முகாம்களில் அண்மையில் ஏற்பட்ட பெரும் மழையால் கூடாரங்களில் வெள்ளம் ஏற்பட்டது குறித்தே சித்தார்த்தன் இந்தக் கருத்தைத் தெரிவித்திருக்கிறார். கடும் மழை பெய்யும் பருவ காலம் அக்டோபரில் ஆரம்பமாகும். இதனால் நிலைமைகள் மேலும் மோசமடையும் நிலைமை காணப்படுகிறது. முகாம்களைவிட்டு மக்கள் வெளியேறுவதற்கான சந்தர்ப்பத்தை அரசாங்கம் வழங்குவது அவசியமென்று சித்தார்த்தன் கூறியுள்ளார்.

இடம்பெயர்ந்த மக்களின் நிலைமை தொடர்பாக அமெரிக்கா கவலை தெரிவித்திருக்கிறது. கடந்த மேயில் முடிவடைந்த யுத்தத்தில் 7 ஆயிரம் பொதுமக்கள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்று ஐ.நா. கூறியுள்ளது. பருவ கால மழை ஆரம்பிக்கப்படவுள்ளதால் முகாம்களில் மோசமான நிலை ஏற்படுமென்றும் மனித உரிமைகள் அமைப்புகள் பல கவலை தெரிவித்துள்ளன. புதிய நோய்கள் பரவும் அறிகுறிகள் முகாம்களில் காணப்படுவதாக நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் உட்பட பல்வேறு அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

இதேவேளை, பாரிய சுகாதாரம் சம்பந்தமான பிரச்சினைகள் முகாம்களில் இல்லையென்றும் முகாம்களில் இயங்கும் சகல சுகாதார நிறுவனங்களும் வழமையான பணியை மேற்கொண்டிருப்பதாகவும் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பான அமைச்சர் மகிந்த சமர சிங்க தெரிவித்திருந்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.