தமிழர்களின் மீதான அடுத்த தாக்குதல், இராணுவக் குடியேற்றங்கள்?

இலங்கையில் தமிழமக்கள் மீதான மற்றுமொரு அழிப்புக்குத் தயாராகிறது இலங்கை அரசு எனச் சந்தேககள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் இனப்பிரச்சனை தொடர்பாக எழுந்த ஆயுதப் போராட்டத்தை, பயங்கரவாதப் போராட்டமாகச் சித்தரித்து, அதனை ஒடுக்குவதாகக் கூறி, சர்வதேச நாடுகள் பலவற்றின் உதவியுடனும், ஈழத்தமிழமக்கள் மீதான இனவழிப்புத் தாக்குதலை நடத்திய இலங்கை அரசு, ஈழத்தமிழ்மககள் இலங்கைத் தீவின் தனித்துவமான ஒரு இனம் என்பதனையும், அதன் பூர்வீகத்தன்மையயையும், அழித்துவிடும் அடுத்தகட்டச் செயற்பாட்டுக்குத் தயாராகிவருவதாக, செய்திகள் கசியத் தொடங்கியுள்ளன.

பல ஆண்டுகள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து, இறுதிக்கட்டப்போரில் அரச படைகளால் கைப்பற்றப்பட்ட, முல்லைத் தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதற்கு அரசு திட்டமிட்டு வருவதாகத் தெரியவருகிறது. இச்சிங்களக் குடியேற்றங்கள் அங்கு அமைக்கப்படவுள்ள இராணுவ முகாம்களை அண்டி ஏற்படுத்தப்படவுள்ளது. இது பரஸ்பரம் சிங்களக் குடியேற்றதாரர்களையும் இராணுவ முகாம்களையும் பாதுகாப்பதற்கு வழி வகுக்கும் என்று அரசு கருதுவதாகத் தெரிகிறது. அவ்வகையில் இவை இராணுவக் குடியேற்றங்களாகவே இருக்கும்.

இந்த இராணுவக்குடியேற்றங்கள் நடந்து முடிந்த பின்னரே முகாம்களிலுள்ள மக்களையும் அவர்களுடனேயே சேர்த்து அருகில் குடியேற்றுவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது என்றும் தெரிய வருகிறது. அந்தப் பகுதியில் உள்ள அனைத்து தனித் தமிழ் கிராமங்களையும் இல்லாமல் செய்யும் யோசனையின்படியே இந்தத் திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முகாமில் உள்ள மக்களில் அநேகமானவர்களை அரசு விசாரணைக்குட்படுத்தி விட்ட நிலையிலும் அவர்களை விடுவிக் காமலிருப்பதற்கு இதுவே காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுக்குள்ளே உள்ள அதிகாரப்பகிர்வு யோசனையை எதிர்க்கின்ற தரப்பினரே இத்தகைய யோசனையை முன்வைத்து செயற்படுகின்றனர் என்றும் தெரிய வருகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.