கோத்தபாய ராஜபக்சேவை படுகொலை செய்ய முயற்சி?

இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சேவை தற்கொலைத் தாக்குதல் மூலம் படுகொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டிருந்ததாகவும்,  அத்திட்டத்தை காவல்துறையால் முறியடிக்கப்படிருப்பதாகவும் காவல்துறைப் பேச்சாளர் நிமால் மெடிவக்க தெரிவித்துள்ளார்.

மேலும்,  இலங்கையின் தலைநகர் கொழும்பின் வடபகுதியில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் மட்டக்குளி பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் இருந்து இந்தத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படவிருந்த பெருமளவு வெடிபொருட்கள், தற்கொலைக் குண்டு அங்கி மற்றும் கைக்குண்டுகள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
 
வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட உந்துருளி ஒன்றைப் பயன்படுத்தி பாதுகாப்புச் செயலாளர் மீது தாக்குதலை நடத்தும் நோக்கத்துடனேயே இந்தப் பொருட்கள் மறைத்துவைக்கப்பட்டிருந்தமை தெரியவந்திருப்பதாகவும் காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
 
புலனாய்வுத்துறை அதிகாரிகளே இந்தத் தாக்குதல் முயற்சி தொடர்பான தகவல்களைக் கண்டுபிடித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.