தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்கும் நடவடிக்கையினை தாமதிக்கக் கூடாது ‐ சிறிநிமல் லக்துசிங்க ‐ தெற்கில் இருந்து ஒரு எச்சரிக்கைக் குரல்

IMG_0126இலங்கையில் சிறுபான்மையினர் என்று ஒரு தரப்பினர் இல்லை என்று ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். அதே போன்று அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வினை முன்வைக்கப்போவதாக அவர் யுத்த வெற்றி விழாக்கள் பலவற்றில் குறிப்பிட்டிருந்தார். 13வது திருத்தத்துடன் பல விடயங்களை சேர்த்து ஒரு தீர்வு திட்டத்தினை முன்வைக்கப்போவதாக ஜனாதிபதி இந்தியத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்திருந்தார். சேர்க்கப்படும் புதிய விடயங்கள் என்று அவர் குறிப்பிடுவது மாகாண சபைகளுக்கான அதிக அதிகாரங்களாக இருக்கும் என்று பலரும் கருதுகின்றனர்.

இதனை அரசாங்கத்திற்குள் அங்கம் வகிக்கும் பலரும் எதிர்;க்கின்றனர். ஹெல உறுமயவின் அமைச்சர் சம்பிக்க ரணவக்க 13வது திருத்தத்தினை வன்மையாக எதிர்க்கின்றார். விமல் வீரவன்சவும் இதனை கடுமையாக எதிர்க்கின்றார். எனினும் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன சிலர் எதிர்க்கின்றார்கள் என்பதற்காக இந்த திட்டத்தினை கைவிடப்போவதில்லை என்று குறிப்பிட்டிருக்கின்றார். அனைத்துக்கட்சிகள் கூட்ட யோசனையைப் பெற்று அதிகப்பட்ச அதிகாரப் பகிர்வினை மேற்கொள்ளப் போவதாக அவர் குறிப்பிட்டிருந்தார். தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவும், தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் குணதாச அமரசேக்கரவும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சர்வ கட்சி கூட்டத்தினை உடனடியாக கலைக்க வேண்டும் என்றும், அதன் யோசனைகளை குப்பைத் தொட்டியில் இட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
 
அன்றைய சூழலில் இருந்த பயங்கரவாதப் பிரச்சினையைத் தீர்க்க உள்ள நடவடிக்கைகள் பற்றி ஆராயவே சர்வ கட்சி மாநாடுகள் நடத்தப்பட்டதாகவும், யுத்தத்தினால் பயங்கரவாதப் பிரச்சினை தோற்கடிக்கப்பட்டு நாடு ஒன்றுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வேறு அரசியல் தீர்வுகள் தேவையில்லை என்று அவர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.
 
எனினும் பயங்கரவாதம் என்பது வேறு. தேசியப் பிரச்சினை என்பது வேறு. பயங்கரவாதம் என்பது தேசியப் பிரச்சினையின் உச்ச சந்தர்ப்பமாகும். இந்த விடயத்தினை தெளிவாக விளங்கிக் கொள்ள நாம் தவறி விடுவோமாயின் அது முழு நாட்டினதும் துரதிருஷ்டமாகும்.
 
யுத்த வெற்றியின் பின்னர் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக ஆராயும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அரசாங்கத்தின் அரசியற் கட்சி ஒன்றின் தலைவர்  ஒருவர் அகதிகளுக்கு வசதிகளை செய்து கொடுக்க வேண்டும், வடக்கு கிழக்கினை அபிவிருத்தி செய்ய வேண்டும், அங்கு மக்களைக் குடியமர்த்த வேண்டும், கல்வி, சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று தெரிவித்தாரே ஒழிய ஒரு மணித்தியாலம் நடைப்பெற்ற அந்த நிகழ்ச்சியில் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினை பற்றி ஒரு வார்த்தையேனும் தெரிவிக்கவில்லை. இது மறதியினால் நடந்த விடயமா? அல்லது பிரச்சினையின் தீவிரம் பற்றிய அறியாமையினால் நிகழ்ந்ததா?
 
இலங்கையில் இனப்பிரச்சினை என்ற ஒன்றே இல்லை என்று பலர் குறிப்பிடுகின்றனர். இவ்வாறு குறிப்பிடும் சிங்களவர்கள் வரலாற்று உண்மைகளை மறந்து விட்டு அவ்வாறு குறிப்பிடுகின்றனர்.
 
தமிழ் மக்கள் தமது இனத்தின் இருப்பினை பேணும் முயற்சிகளில் சுதந்திரத்திற்கு முன்னரேயே ஈடுபட்டனர். டொனமூர் ஆணைக்குழு முன் அவர்கள் சமர்ப்பித்த விடயங்கள் கருத்திற்கொள்ளாததினால் 1931ல் நடைப்பெற்ற தேர்தலை புறக்கணிக்க யாழ் இளைஞர் அமைப்பு தீர்மானித்தது. இது முக்கிய ஒரு விடயமாகும். தோட்டத்தொழிலாளர்களின் வாக்குரிமை 1948ல் பறிக்கப்பட்ட போது வடக்கில் தமிழ் மக்கள் தமது எதிர்காலம் குறித்து அச்சம் கொள்ள தொடங்கினர். 1956ல் சிங்கள மொழி அரச கரும மொழியானது. இதனால் தமிழ் மக்கள் வெறுப்படைந்தனர். இலங்கையர்கள் என்று சிந்திப்பதனை விட தமிழர்கள் என்று சிந்திக்க அவர்கள் தலைப்பட்டனர்.
 
இந்நாட்டு தமிழ் மக்களுக்கு தனி அடையாளங்கள் உண்டு, அவர்கள் தமிழர்களாக இருந்து கொண்டு இலங்கையர்களாகவும் இருக்கின்றனர் என்பதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். பயங்கரவாதத்தினை யுத்த நடவடிக்கையினால் தோற்கடித்த பின்னர் இனத்தின் எதிர்காலம் குறித்து நேர்மையாக சிந்திப்பவர்கள் எனின் நாம் அவ்வாறே சிந்திக்க வேண்டும். தமிழ் மக்கள் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று கருதியதனாலேயே பயங்கரவாதம் ஆரம்பமானது. அமைதி வழியில் பிரச்சினையைத் தீர்க்க வழியில்லை என்று இளைஞர்கள் கருதியதனாலேயே இப்பிரச்சினை ஆரம்பமானது.
 
உரிய தருணத்தில் உரிய நடவடிக்கைகளை எடுக்காவிடின் அதற்கான நட்டஈட்டினை நாம் செலுத்த நேரிடும் என்று என்.எம்.பெரேரா தனது இறுதி நூலில் குறிப்பிட்டுள்ளார்.
 
பயங்கரவாதம் முடிவுற்றதுடன் தமிழ் மக்கள் பிரச்சினையும் முடிந்தது என்று கருதுவோமாயின் அது பெரும் முட்டாள்தனமாகும். வடக்கு கிழக்கினை அபிவிருத்தி செய்து அங்கு அவர்களை மீளக் குடியமர்த்துவதன் ஊடாக பிரச்சினைகளைத் தீர்க்கலாம் என்று கருதுவதும் பெரும் பிழையாகும்.
 
தமிழ் மக்கள் தமது நோக்கத்தினை எய்த பயன்படுத்திய ஒரு வழிமுறையே பயங்கரவாதமாகும். அது மோசமானது என்பது உண்மையே. எனினும் தமிழ் மக்களின் பிரச்சினையை அந்த நோக்கத்திலேயே பார்ப்பது தவறாகும்.
 
40களில் கடும் போக்காளராக இருந்த ஜி.ஜி.பொன்னம்பலத்தினை அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ள முடிந்ததன் ஊடாக தமிழ் மக்களை திருப்திப்படுத்த முடியும் என்று 1948ல் சிங்களவர்கள் சிந்தித்தனர் என்று கருத முடியும். தற்பொழுதைய அரசாங்கத்திடமும் அவ்வாறான திட்டம் உள்ளதனை அவதானிக்க முடிகின்றது.
 
தமிழ் புத்திசீவிகளின் குரல்களை செவிமடுப்பதன் ஊடாகவே தமிழ் மக்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்ள முடியும். தமிழ் எழுத்தாளர்களின் விடயங்களை வாசித்தறிய வேண்டும். தமிழ் மக்கள் எப்படி பயங்கரவாதத்தினை நோக்கி தள்ளப்பட்டனர் என்பதனை அந்த படைப்புகளின் ஊடாக நாம் புரிந்து கொள்ள முடியும். எமது அரசியல்வாதிகள் இந்த விடயங்களை விளங்கிக் கொள்ள வேண்டும். உரிய தருணத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்த தவறுவோமாயின் அதற்கான நட்டஈட்டினை பிற்காலத்தில் வழங்க நேரிடும்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.