உணவிற்கும், தாகத்தை தணிக்கும் தண்ணீரும், மருந்துக்கும் வரிசையில் நின்ற மக்கள் இப்போ மரணத்திற்கும் வரிசையில் ‐ மனோகணேசன்

ManoGanesan2உணவிற்கும், தாகத்தை தணிக்கும் தண்ணீரும், மருந்துக்கும் வரிசையில் நின்ற இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் தற்போது மரணத்திற்காகவும் வரிசையில் காத்து நிற்பதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.
 
இந்த அவல நிலை உலகத்திலே இலங்கையிலேயே காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மனித உரிமைகளுக்கான பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று கொழும்பு நிப்போன் ஹோட்டலில் செய்தியாளர் மாநாடொன்றை நடத்தினர்.
 
இந்த செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த மனோ கணேசன், யுத்தத்தினால் இடமபெயர்ந்து அகதி முகாம்களில் தங்கியுள்ள மக்கள் உணவிற்காகவும், தண்ணீருக்காகவும், ஏன் மலசலம் கழிப்பதற்காகவும் வரிசையில் நின்ற காலத்துடன் தற்போது மரணத்திற்காகவும் வரிசையில் நிற்கவேண்டிய சூழ்நிலை தோன்றியுள்ளதாக குறிப்பிட்டார்.
 
இடம்பெயர்ந்த மக்கள் மீளக் குடியமர்த்தப்படாமல் இவ்வாறு முகாம்களில் தடுத்து வைத்திருப்பதற்கு அப்பகுதிகளில் புதைக்கப்பட்டிருக்கின்ற நிலக் கண்ணிவெடிகளும், முகாம்களுக்குள் மக்களுடன் மக்களாக கலந்திருக்கும் விடுதலை புலி உறுப்பினர்களுமே காரணம் என இலங்கை அரசாங்கம் தெரிவித்து வருகின்றது. ஆனால் உண்மை அதுவல்ல அதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
இலங்கை அரசாங்கம் தமது படையினர் மிக எளிதில் இந்த யுத்த வெற்றியை பெற்றுக் கொள்ளவில்லை எனவும், இரவு பகலாக ஒவ்வொறு நாளும் ஒவ்வொறு அங்குல நிலமாகவே கைப்பற்றியே இந்த வெற்றியை பெற்றதாக தெரிவிக்கின்றனர். அப்படி ஒவ்வொரு அங்குலமாக மீட்கப்பட்ட இடங்களில் இன்னும் கண்ணிவெடிகள் அகற்றப்படவில்லையா? என்ற கேள்வியையும் அவர் முன்வைத்தார்.
 
வடக்கில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பதனை தாம் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்த ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர், எல்லா இடங்களிலும் கண்ணிவெடி புதைக்கப்பட்டிருக்கின்றதாக என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
 
அத்துடன் வடக்கில் சுமார் 10 வீதமான பகுதிகளிலேயே கண்ணிவெடிகள் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டிய அவர் அப்பகுதியல் வாழ்ந்த மக்களுக்கு இது ஒரு பாரிய சிக்கல் அல்ல எனவும் அரசாங்கம் விரைந்து செயற்பட்டிருந்தால் அந்த கண்ணிவெடிகளை அகற்றி அந்த மக்களை மீளக் குடியேற்றியிருக்கலாம் எனவும் குறிப்பிட்டார்.
 
அடுத்ததாக முகாம்களுக்குள் இருக்கும் விடுதலை புலி உறுப்பினர்களை கைது செய்வது நல்ல விடயம் தான் என தெரிவித்த அவர் இவ்வாறு மறைந்துள்ள ஒரு சில உறுப்பினர்களுக்காக அனைத்து மக்களும் முட்கம்பிக்குள் தடுத்து வைக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்க விடயம் எனவும் தெரிவித்தார்.
 
மற்றும் எதிர்வரும் ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல்களை இலக்காக கொண்டும் இந்த மக்கள் குறித்த முகாம்களிலேயே அடைக்கப்பட்டிருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
 
முகாம் மக்களிடையே சுமார் 1 இலட்சத்து 75 வாக்குகள் காணப்படுவதாகவும் அந்த வாக்குகளை பலவந்தமாக, மக்களை பயமுறுத்தி, நயவஞ்சகமாக தமக்கு சாதகமாக பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே இந்த மக்களை தொடர்ந்தும் முகாம்களிலேயே தடுத்து வைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
 
 இவ்வாறான சூழ்நிலையில் கண்ணிவெடிகளையும், விடுதலை புலி சந்தேக நபர்களையும் காரணம் காட்டி இந்த மக்களை தொடர்ச்சியாக இந்த முகாம்களிலேயே தடுத்து வைத்திருப்பதை தாமோ சர்வதேசமோ ஏற்றுக்கொள்ளாது எனவும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.