வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாமில் பாதுகாப்பற்ற ஆயிரத்து 64 சிறுவர்கள் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது

question-mark3aவவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாமில் பாதுகாப்பற்ற ஆயிரத்து 64 சிறுவர்கள் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்களில் 76 பேரின் பெற்றோர்கள் தேடி அறியப்பட்டு, அவர்கள் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.
68 பேர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என சிறுவர் திணைக்களத்தின் ஆணையாளர் சரத் அபேகுணவர்தன தெரிவித்துள்ளனர்.

மேலும் 375 பேர் வவுனியா மற்றும் மன்னார் பிரதேசங்களில் உள்ள சிறுவர் இல்லங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 161 சிறுவர்கள் எஸ்.ஓ.எஸ். சிறுவர் கிராமத்தில் கையளிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 384 சிறுவர்கள் தொடர்பான நடவடிக்கைகளை தற்போது மேற்கொண்டு வருவதாகவும் அடுத்த மாதம் 15 ஆம் திகதிக்கு பின்னர் இந்த நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டு விடும் எனவும் ஆணையாளர் கூறியுள்ளார்.
 
வவுனியா நீதவான் நீதிமன்றம், காவற்துறையினர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு திணைக்களம் என்பன இணைந்து இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
 
யுத்தத்தின் போது, பல சிறுவர்கள் தமது தாய் மற்றும் தந்தை இழந்துள்ளனர். இவர்கள் கடந்த மூன்று மாதங்களாக இடம்பெயர்ந்த முகாமிலேயே தங்கியிருந்தனர்.  உணவு, குடிநீர் போன்றவை போதியளவில் கிடைப்பதில்லை என கூறப்படும் முகாம்களில், இந்த அனாதரவான சிறுவர்கள் நிலைமைகள் குறித்து கவலை வெளியிடப்பட்டுள்ளது.
 
சிறுவர்களுக்கான முகாம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது ‐ சுமேதா பீ.ஜயசேன:
 
இடம்பெயர்ந்த சிறுவர்களுக்கான செட்டிக்குளம் மெனிக்பார்ம் இடம்பெயர்ந்தோர் முகாமுக்கு அருகில் சிறுவர்களுக்கான முகாம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாக சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளீர் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சுமேதா பீ.ஜயசேன தெரிவித்துள்ளார்.
 
இலக்கம் 4 வலயத்தில் 4 ஏக்கர் நிலப்பரப்பில் சகல வசதிகளுடன் 600 சிறுவர்கள் தங்கும் வகையில் இந்த முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
 
இடம்பெயர்ந்த சிறுவர்களில் 300 பேர் தற்போது அதில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. தலா 100 சிறுவர்கள் தங்கியிருக்க கூடிய 4 கட்டிடங்கள் அதில் அமைக்கப்பட்டுள்ளதுடன் இந்த சிறுவர்களுக்காக மாதாந்தம் 2 மில்லியன் ரூபா செலவிடப்படுகிறது. இதற்கான நிதியை எஸ்.ஓ.எஸ் நிறுவனம் செலவிட்டு வருகிறது எனவும் அமைச்சர் சுமேதா குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.