இலங்கைக்கு எதிராக சர்வதேச சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் ‐ மனித உரிமை கண்காணிப்பகம்

hrw_logoஇலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

அண்மையில் பிரித்தானிய தொலைக்காட்சியான செனல்‐4 வெளியிட்டுள்ள காட்சிகளின் மூலம் இந்த விடயம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இறுதிக் கட்ட மோதல்களின் போது இரண்டு தரப்பினரும் யுத்த குற்றச் செயல்களில் ஈடுபட்டிருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக மனித உரிமை கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.
 
எனவே, சர்வதேச ரீதியான விசாரணைகளின் மூலம் இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இராணுவச் சீருடை அணிந்த சிலர் கைதிகளை சுட்டுக் கொலை செய்வதனைப் போன்ற வீடியோ காட்சிகளை செனல்‐4 வெளியிட்டுள்ளது.
 
எவ்வாறெனினும், இந்த வீடியோக் காட்சியின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த முடியாது என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
 
1949ம் ஆண்டு ஜெனீவா பிரகடனத்தின் அடிப்படையில் இவ்வாறான செயல்கள் யுத்தக் குற்றங்களாகவே கருதப்பட வேண்டுமென அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
 
மோதல்கள் இடம்பெற்ற சமயத்தில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் யுத்த குற்றச் செயல்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
 
சுயாதீன கண்காணிப்பாளர்கள் உறுதிப்படுத்தாத நிலையில் இரு தரப்பினர்களது கருத்துக்களையும் முழுமையாக ஏற்றுக் கொள்வதில் சிக்கல் நிலை காணப்படுவதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
 
இலங்கையின் சகல ஆயுதக் குழுக்களினாலும் மேற்கொள்ளப்பட்ட யுத்த குற்றச் செயல்கள் தொடர்பில் பக்கச் சார்பற்ற விசாரணைகளை நடத்தும் பொருட்டு ஐக்கிய நாடுகள் அமைப்பு விசேட ஆணைக்குழுவொன்றை உருவாக்க வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.