தமிழர் படுகொலை வீடியோ: இந்தியா விசாரிக்கும்!- எஸ்எம் கிருஷ்ணா

sm-krishnaஇலங்கையில் தமிழ் இளைஞர்கள் கைகள்- கண்கள் கட்டப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்எம் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடந்த போரில் சுமார் 3 லட்சம் அப்பாவி ஈழத் தமிழர்கள் வீடுகளை இழந்து அகதிகளானார்கள். விடுதலைப் புலிகளை இனம் பிரிக்கிறோம் என்று கூறி அவர்களை தடுப்பு முகாம்களில் தங்க வைத்து சிங்கள அரசு கொடுமைப்படுத்தி வருகிறது.

முகாம்களில் உள்ள இளைஞர்கள், இளம்பெண்கள் அனைவருமே விடுதலைப் புலிகளாக இருக்கலாம் என்ற சந்தேகக் கண்ணோடு பார்க்கும் சிங்கள ராணுவத்தினர், அவர்களை கடத்திச் சென்று படுகொலை செய்வதாக புகார்கள் உள்ளன.

கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் சரணடைந்த விடுதலைப் புலிகள் பலரும் சுட்டுக் கொல்லபப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது.

இதுவரை மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த மனிதப் பேரவலம் இப்போது வெளியில் தெரிய வந்துள்ளது.

பிரிட்டனின் ‘சானல் 4’ தொலைக்காட்சி இதனை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியுள்ளது. ஈழத் தமிழர்களின் கண்களை கட்டி, நிர்வாணமாக்கி, ஒரு சிங்கள ராணுவ வீரர் ஈவு இரக்கமின்றி இயந்திரத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் காட்சியை அந்த டி.வி. சானல் நேற்று முன்தினம் ஒளிபரப்பியது.

சர்வதேச மீடியாவில் பெரும் விவாதத்துக்குரிய விஷயமாகியுள்ளது இந்தக் கொடிய நிகழ்வு.

ஆனால், இலங்கை அரசு இந்த காட்சிகள் போலியானவ என்று அறிவித்துள்ளது. சீனா ஆதரவு இருப்பதால், ராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் இந்தியாவை ஏமாற்றி வரும் இலங்கை அரசு, இந்த விஷயத்திலும் உலக நாடுகளை திசை திருப்பும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

இது குறித்து லண்டன் பிபிசி தொலைக்காட்சி, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை தொடர்பு கொண்டு கருத்து கேட்டது. அதற்கு எஸ்.எம். கிருஷ்ணா பதிலளிக்கையில்,

ஈழத் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக வெளியான தொலைக்காட்சி ஒளிபரப்பு குறித்து இந்திய அரசு கவனம் செலுத்தியுள்ளது. இது பற்றி முழுமையாக விசாரிக்கப்படும். இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தர இலங்கையி்ல் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.