ஸ்ரீலங்கா படைகளால் தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு கண்டனம் – வன்னி மாவட்ட தமிழ் மாணவர் ஒன்றியம்

அண்மையில் தமிழ் இளைஞர்கள் சிங்கள இனவெறியர்களால் கைகள் கட்டப்பட்டு தலையில் சுடப்பட்ட காணொளி வெளிவந்திருந்தது. அப்படுகொலைகளை கண்டித்து வன்னி மாவட்ட தமிழ் மாணவர் ஒன்றியத்தினர் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளனர். அவ்வறிக்கையின் முழுப்பிரதி பின்வருமாறு:

தமிழ் மாணவர் ஒன்றியம்
வன்னி மாவட்டம்
வவுனியா

28-08-2009

ஸ்ரீலங்கா படைகளால் தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு கண்டனம்

வன்னி பெருநிலப்பரப்பின் மீது ஸ்ரீலங்கா இராணுவம் கடந்த இரண்டு 2006ம் ஆண்டு தொடக்கம் 2009 மே 18ம் திகதி வரை மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையின் போது பல்லாயிரக்கணக்கான பொது தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். எனினும் போர் நடைபெற்ற பகுதிகளுக்கு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு ஊடகங்கள் அனுமதிக்கப்படாமையினாலும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் யுத்தப் பிரதேசங்களில் இருந்து வெளியேற்றப்பட்டமையினாலும் பாதிக்கப்பட்ட மக்கள் உயிர் தப்பியவர்களும் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளமையினாலும் போர் நடைபெற்றபோது பொது மக்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிகள் வெளி உலகுக்கு தெரியவிடாமல் தடுக்கப்பட்டுள்ளது.

எனினும் கடந்த 25ம் திகதி பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் சனல்4 என்னும் தொலைக்காட்சி இலங்கைப்படைகளால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளை சித்தரிக்கும் ஒளிநாடா ஒன்றினை காண்பித்துள்ளது. இந்த ஒளிநாடாவில் இடம் பெறும் காட்சிகள் பார்ப்பவர்களின் உதிரத்தினை உறைய வைப்பதாக உள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் பிரசாரத்தினை நம்பி தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து வெளியேறி இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு சென்ற பொது மக்களை கைது செய்து நிர்வாணப்படுத்தி கைகளை பின்புறமாக கட்டிவைத்து கொடூரமாக சித்திரவதை செய்த பின்னர் அவர்களை வெளியான பிரதேசம் ஒன்றிற்கு இழுத்து வந்து அங்கு வைத்து தலையில் சுட்டுக் படுகொலை செய்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதத்தில் கொழும்பில் இராணுவத் தளபதிகளின் உயர் மட்ட கூட்டம் ஒன்றில் உரையாற்றிய இலங்கையின் பாதுகாப்புத் துறை செயலாளரும் இலங்கை சனாதிபதி மகிந்தராசபக்சவின் சகோதரருமான கோட்டாபயராசபக்ச அவர்கள் வன்னியில் உள்ள ஆண்களின் குருதியினால் இந்து சமுத்திரம் சிவப்பாகட்டும் என்றும் அங்குள்ள பெண்கள் படையினருக்கு விருந்தாகட்டும் என்றும் கூறியிருந்தான். அந்த கொலை வெறியனின் வழி நடத்தலிலேயே மேற்படி கொலைகள் அனைத்தும் அரங்கேறியுள்ளது.

வன்னியில் இருந்த மக்களில் சுமார் 200000 பேரின் நிலை என்ன ஆனது என்பது பற்றி இன்றுவரை யாருக்கும் தெரியாது. இவர்களின் நிலை என்னவானது என்று அறிய இன்று வரை யாரும் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்வில்லை.

ஈவிரக்கமற்ற முறையில் அப்பாவித் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலையை மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம். இந்த கொலை வெறியர்களை சர்வதேச சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுக்க புலம்பெயர்ந்த தமிழ் மக்களால் மட்டுமே முடியும்.

எனவே புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் அமைதியாக இருக்காது தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு படுகொலை மே;றகொண்ட இலங்கை சனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் கோட்டாபயராசபக்ச, இராணுவத்தளபதி சரத்பொன்சேகா உள்ளிட்ட கொலையாளிகளை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தி மரண தண்டனை பெற்றுக் கொடுக்கவும், காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்குமான அழுத்தங்களை ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளுக்கு கொடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி வேண்டுகின்றோம்.

நன்றி

ப.குணேந்திரன்
தலைவர்
தமிழ் மாணவர் ஒன்றியம்
வன்னி மாவட்டம்
வவுனியா

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.