சிறிலங்கா மீது போர்க்குற்ற விசாரணை நடாத்தப்பட வேண்டும்: எரிக் சொல்ஹெய்ம் வலியுறுத்தல்

Erik_Solheim_og__sl_798550fபிரித்தானியாவில் இருந்து ஒளிபரப்பாகும் ‘சனல் – 4’ தொலைக்காட்சி வெளியிட்ட, சிறிலங்கா அரச படைகளின் படுகொலை தொடர்பான காணொலி தொடர்பாக சிறிலங்கா மீது போர்க் குற்ற விசாரணைகளை ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுக்க வேண்டும் என்று நோர்வேயின் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சரும் முன்னாள் சமாதான சிறப்புத் தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் வலியுறுத்தியுள்ளார்.

நோர்வேக்கு நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை வருகை தரவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் இது விடயம் தொடர்பாக வலியுறுத்தவுள்ளதாக எரிக் சொல்ஹெய்ம் மேலும் தெரிவித்துள்ளார்.

நிர்வாணமாக்கப்பட்டு, கண்கள் கட்டப்பட்ட நிலையில் சிறிலங்கா அரச படைகளால் தமிழ் இளைஞர்கள் கோரமாக படுகொலை செய்யப்பட்ட, ‘சனல் – 4’ வெளிக்கொணர்ந்த காணொலி காட்சி தொடர்பான செய்தியையும் படங்களையும் நோர்வேஜிய ஊடகங்களும் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த காணொலி காட்சி உண்மையாக இருந்தால் அது ஆச்சரியத்திற்கு உரியதல்ல எனவும் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இறுதி ஆண்டுகளில் வகை தொகையின்றி மக்கள் கொல்லப்பட்டும் காணாமல் போயும் உள்ளனர். இந்தக் கொலைகள் மற்றும் காணாமல் போதல் சம்பவங்கள் மீது எந்தவிதமான சட்ட நடவடிக்கைகளோ, நீதி விசாரணைகளோ நடாத்தப்படவில்லை.

இந்தக் கொலைகள் மற்றும் காணாமல் போதல்களின் பின்னணியில் சிறிலங்கா அரச இயந்திரத்தின் அலகுகள்; இயங்கியமைக்கான திடமான பல ஆதாரங்கள் உள்ளன என எரிக் சொல்ஹெய்ம் ‘ஆப்தன்போஸ்தன்’ நாளேட்டுக்கு தெரிவித்துள்ளார்.

இறுதிக்கட்ட போரின்போது வடக்கு பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. எந்தவொரு உதவி நிறுவனமோ அன்றி சுயாதீன ஊடகவியலாளரோ அப்பகுதிக்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால் சிறிலங்கா அரச படைகளுக்கு எதிராக எழுந்துள்ள போர்க்குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுக்களை உறுதி செய்ய முடியவில்லை.

இவ்வாறான புறச்சூழல்கள் ஐ.நா.வினால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதை கடினமாக்கும் காரணிகளாக உள்ளன. அத்துடன், ஐ.நா. பாதுகாப்புச் சபையிலும் இதற்கான பெருத்த ஆதரவு ஏதும் நிலவவில்லை.

ஆனபோதும் இந்தக் காணொலி போன்ற ஆதாரங்கள் சிறிலங்கா மீதான போர்க்குற்ற விசாரணைகளுக்கான கோரிக்கையை வலுப்படுத்துகின்றன எனவும் எரிக் சொல்ஹெய்ம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘ஆப்தன்போஸ்தன்’ நாளேடு வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சிறிலங்கா அரச தலைவரும் அவரது அரசும் பதவிக்கு வந்த கடந்த நான்கு ஆண்டுகளில் மனித உரிமைகளையும், ஜனநாயக நியமங்களையும் புறந்தள்ளி வந்துள்ளதாக குற்றம் சாட்டப்படுகின்றது.

அரசுக்கு எதிரானவர்கள் ‘வெள்ளை வான்’ மூலம் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், தொண்டர் நிறுவனப் பணியாளர்கள் ஆகியோரே இவ்வாறான வெள்ளைவான் கடத்தலுக்கு அதிகம் ஆளாகுகின்றனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 34 ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக, ‘சனல் – 4’ ஊடாக காணொலியை வெளிக்கொணர்ந்த ‘ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு’ (Journalists for Democracy in Sri Lanka) தகவல் வெளியிட்டுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான மகிந்த அரசின் போரினால் தமிழ் மக்கள் பாரிய மனித அவலங்களுக்குள் தள்ளப்பட்டுள்ளனர் என ‘ஆப்தன்போஸ்தன்’ நாளேட்டின் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.