விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் – இயக்குநர் சீமான்

Seemanவிடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று நாம் தமிழர் இயக்கத் தலைவரும், திரைப்பட இயக்குநருமான சீமான் கூறியுள்ளார்.

இலங்கைத் தமிழர்கள் சொந்த நாட்டிலேயே முள்வேலியில் அடைக்கப்பட்டு சித்திரவதைச் செய்யப்படுவதாக, அவர்கள் தமது இருப்பிடங்களுக்கு குடிபெயரச் செய்ய வலியுறுத்தி தூத்துக்குடியில் மாபெரும் பேரணி நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில், இயக்குநர் சீமான் தலைமையில் நடைபெறுகிறது.

இதில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வந்த இயக்குநர் சீமான் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழின அழிப்பு போரில் ஈடுபட்ட இலங்கை அரசுக்கு உலக நாடுகள் பொருளாதார தடை விதிக்க வேண்டும். குறிப்பாக இந்தியா உடனடியாக அதைச் செய்ய வேண்டும்.

இலங்கையில் போர் முடிந்து 3மாதங்கள் ஆகியும், முள் வேலிக்குள் வாழ்விழந்து கிடக்கும் தமிழ் மக்களை உடனடியாக, அவரவர் தம் இருப்பிடங்களுக்கு சென்று குடியேற அனுமதிக்க வேண்டும். அவர்களுக்குத் தேவையான உணவு வசதிகளை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். பச்சிளம் குழந்தைகள் பால் இல்லாமல் தவித்து வருகின்றனர். உணவு, உடை உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும்.

தொடர்ந்து இந்திய அரசும், தமிழக அரசும் இலங்கைக்கு பண உதவி செய்வதை நிறுத்த வேண்டும். மேலும், நம் நாட்டில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும். காந்தியை கொன்ற வழக்கில் கூட ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு 17 மாதங்கள் மட்டுமே தடை விதிக்க முடிந்தது. ஆனால் 20 ஆண்டுகளாக ஒரு இயக்கம் தடை செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இதற்கான வாக்கெடுப்பை நடத்த வேண்டும்.

அடுத்த ஆண்டு மே மாதம் 17ம் தேதி தமிழ் மக்களையும், இந்த மண்ணையும் இணைக்கும் விழாவாக, நாம் தமிழர் இயக்கம் அரசியல் இயக்கமாக உருவாகும் என்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.