ஊடகவிலாளர் திசநாயகத்தின் மீதான நீதியற்ற தீர்ப்புக்கு கண்டனம் – தமிழ் மாணவர் ஒன்றியம்

தமிழ் மாணவர் ஒன்றியம்
வன்னி மாவட்டம்
வவுனியா
01-09-2009

ஊடகவிலாளர் திசநாயகத்தின் மீதான நீதியற்ற தீர்ப்புக்கு கண்டனம்

ஊடகவியலாளர் திசநாயகம் அவர்களுக்கு ஸ்ரீலங்காவின் சிங்கள உயர் நீதிமன்றம் நேற்றய தினம் திங்கட்கிழமை (31-8-2009) 20 ஆண்டுகால சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த காலத்தில் தமிழ் மக்கள் மீது சிங்கள அரசாங்கம் மேற்கொண்டு வந்த இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்களை எழுதி வெளி உலகின் கவனத்திற்கு கொண்டுவரும் பணியை துணிச்சலுடன் திசநாயகம் அவர்கள் மேற்கொண்டு வந்திருந்தார்.

இலங்கை அரசாங்கம் தமிழ் மக்கள் மீது மேற்கொண்டு வந்த தொடர்ச்சியான மனிதப் படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் திசநாயகத்தின் ஊடகப் பணியின் காரணமாக சர்வதேச சமூகத்தின் கவனத்தினை ஈர்த்த நிலையில் சர்வதேச சமூகத்தின் அழுத்தங்கள் இலங்கை அரசாங்கத்திற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

இலங்கை அரசாங்கம் கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தினை முன்னெடுத்த போதும் வன்னியில் யுத்தத்தினை முன்னெடுத்த பொழுதிலும் சரி விடுதலைப் புலிகளை போரில் தாங்கள் வெல்வது சாத்தியமற்றது என்பதனை நன்கு உணர்ந்து போரை வெல்லுவதற்கான உத்தியாக விடுதலைப் புலிகளின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து பொது மக்களை வெளியேற்றும் சூழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தினர். பொது மக்கள் தாமாக வெளியேற மறுத்த நிலையில் அந்த மக்களுக்கான உணவு மருந்துப் பொருட்கள் குழந்தைகளுக்கான பால்மா உட்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் அணைத்தையும் தடை செய்து பொது மக்களை இலக்கு வைத்து விமானக் குண்டுகள் மற்றும் எறிகணைகளை கண்மூடித்தனமாக வீசி கோழைத்தனமாக பொது மக்களை படுகொலை செய்வதன் ஊடாகவே தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆளுகையில் இருந்த பகுதிகளை ஆக்கிரமித்னர்.

சர்வதேச போர் நெறிமுறைகள் மற்றும் சர்வதேச மற்றும் உள்ளுர் மனிதாபிமானச் சட்டங்கள் அனைத்துக்கும் முரணான வகையில் தமிழ் மக்களுக்கு எதிராக தாங்கள் மேற்கொண்ட படுகொலைகள் மனித உரிமை மீறல்களை மூடி மறைக்கும் நோக்கில் இலங்கை அரசாங்கம் திசநாயகம் அவர்களுக்கு நீதிக்குப் புறம்பான வகையில் 20 ஆண்டுகால சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

மகிந்தராசபக்ச அரசாங்கம் தமிழ் மக்கள் மீது மேற்கொண்டுள்ள இனப் படுகொலைக்கான சர்வதேச விசாரணைகள் நீதியான முறையில் முன்னெடுக்கப்பட்டால் இலங்கை ஐனாதிபதி மகிந்தராஐபக்ச, அவரது சகோதரர் கோட்டாபயராஐபக்ச, பசில்ராஐபக்ச, இராணுவத் தளபதி சரத்பொன்சேகா, மற்றும் முக்கிய இராணுவ அதிகாரிகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும்.

சிங்கள பௌத்த பேரினவாத ஆட்சியாளர்கள் தமிழ் மக்களை அழித்தொழிப்பதில் முனைப்புக்காட்டுகின்றார்கள் என்றால் இலங்கையின் நீதித்துறையும் ஒரு பக்கச் சார்பாக சிங்கள பௌத்த பேரினாவத ஆட்சியாளர்களின் தமிழ் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளை முழுமையக பாதுகாக்கும் இயந்திரமாக செயற்பட்டு வநதுள்ளது என்பது பலரும் அதிகம் அலட்டிக் கொள்ளாத கசப்பான உண்மையாகும்.

ஊடகவியலாளர் திசநாயகம் அவர்களது விடயத்தில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி தீபாளி விஐயசுந்தர கூட மிகவும் அநியானமான முறையில் தனது அதிகாரங்களை தமிழ் மக்களில் உரிமைக் குரலை ஐனநாயகக் குரலை நசுக்க பயன்படுத்தியுள்ளார். இலங்கை அரசாங்கத்தின் மீது ஐக்கிய நாடுகள் சபை பக்கச்சார்பற்ற முறையில் போர்க் குற்ற விசாரணைகளை மேற்கொள்ளுமாயின் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் இராணுவத்தளபதி மற்றும் ஐனாதிபதி பாதுகாப்பு செயலாளர் மட்டும் அல்ல இந்த நீதிபதிகளும் தான்.

திசநாயகத்திற்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிக்கு எதிராக உலகம் முழுவதும் பரந்துவாழும் தமிழ் மக்கள் உங்களது காட்டமான எதிர்ப்பை தயவு செய்து காட்டுங்கள் இல்லையேல் இன்னும் பத்தாயிரம் பேருக்கு கொடிய சிங்களம் ஆயுட்கால சிறைத் தண்டனை விதிக்கப்ப போகின்றது.

திசநாயகம் அவர்களுக்கு ஸ்ரீலங்காவின் சிங்கள தேசம் தண்டனை வழங்கியிருந்தாலும் தமிழ் மக்களை பொறுத்த வரையில் அவர் ஒரு மாபெரும் தியாகி புனிதமான தமிழ் தேசியவாதியாகவே தமிழ் இனம் மதிக்கும்.

சிங்கள நீதித்துறையின் பாராபட்சமான நடவடிக்கைகளே பிரபாகரன் என்ற தன்னிகரில்லா தலைவனை தமிழ் மக்களுக்கு தந்தது. முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரும் சிங்கள பௌத்த பேரினவாத அரசும் அதன் காவல்துறை மற்றும் நீதித்துறைகளும் தங்களது அதே பேரினவாத சிந்தனையுடன் தான் தமிழ் மக்கள் விடயத்தில் நடந்து கொள்ளப் போகின்றார்கள் என்றால் மிகவும் பாராதூரமான விளைவை சிங்களம் மிக விரைவில் சந்திக்க நேரிடும்.

நன்றி

குணேந்திரன்
தமிழ் மாணவர் ஒன்றியம்
வன்னி மாவட்டம்

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.