துன்பத்தில் இருக்கின்ற மக்களை நிச்சயமாக விடுவிப்போம்.

உலகத்தமிழர் பேரவையின் ஆரம்பக் கூட்டம் 29ம் திகதி சனிக்கிழமையன்று பிரான்ஸ், பாரீஸ் நகரத்திலுள்ள நொவோத்தல் விடுதியில் காலை 9மணியளவில் அகவணக்கத்துடன் அரம்பமாகியிருந்தது. நிகழ்வின் ஆரம்ப உரையை திரு. கிருபானந்தன் அவர்கள் ஆற்றியிருந்தார். அதனைத் தொடர்ந்து பேராசிரியர் திரு. ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களின் தொகுப்பில் நிகழ்வு ஆரம்பமாகியிருந்தது.

இதன் போது முறையே 29, 30, 31ம் திகதிகளில் ஐந்து கண்டங்களிலும் உள்ள 14 நாடுகளிலிருந்து, தமிழ் அமைப்புக்களின் 70க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் ஒன்று கூடி உலகத் தமிழர் பேரவையின் கொள்கை, நோக்கம், எதிர்கால நடவடிக்கைகள், அதன் செயற்பாடுகள் போன்ற நடவடிக்கைகள் தொடர்பாக ஒன்று கூடி, கலந்தாலோசித்திருந்தனர்.

தொடர்ந்து மூன்று நாட்கள் இரவு பகலாக உலகத்தமிழர் பேரவையின் நோக்கம், செயற்பாடுகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு, இந்தப் பேரவையின் தலைவராக கலாநிதி. நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் அவர்கள் தெரிவு செய்யப்பட்டு உரையாற்றுகையில், இந்த நடவடிக்கை என்பது மே-17ம் திகதியின் பின் எடுக்கப்பட்ட முயற்சியாகும். உடனடியாக, ஜனநாயகமான, ஒரு நிறுவனத்தை, சட்டரீதியான நிறுவனமாக உருவாக்க வேண்டும் என்ற ஆவலுடன் உலகத் தமிழர் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்திருந்தார்.

முக்கிய நோக்கங்களாக
1. சிறீலங்காப் பேரினவாத அரசின் யுத்த தாண்டவத்தினால் மூன்று லட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் சொந்த நாட்டிலேயே திறந்த வெளிச்சிறைச்சாலைக்குள் இருக்கின்றார்கள். இந்த மக்கள் உடனடியாக அவர்களது சொந்த வீடுகளுக்கு திரும்பிச் செல்வதற்கு உடனடியாக நடவடிக்கைகள் எடுத்தல்,
2. எங்களுடைய தமிழ் மக்களுக்கு தீமை செய்தவர்களை சர்வதேச நீதி மன்றத்தின் முன்னிலையில் நிறுத்துவது,
3. எமது மக்களின் தாயகம், தேசியம், சுய ஆட்சி முறையை உருவாக்கச் செய்தல்,
4. 1976ம் ஆண்டு தமிழ் மக்களுக்கான தீர்வாக முன்மொழியப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை வலியுறுத்துதல்,
5. எமது தமிழ் மக்களின் துன்பங்களை நீக்குவதற்கு, விடுதலை அடையவைப்பதற்கு வித்திடுவதுடன் உலகத்திலுள்ள மக்களை ஒன்று சேர்த்து சர்வதேசத்தின் ஆதரவுடன் இணைந்து செயற்படும்.
6. இளம் தலைமுறையினரை ஒன்றிணைத்து அவர்களை ஊக்குவித்தல்.

நொந்த மனத்துடன் நிலத்தில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு நீங்கள் தெரிவிக்கின்ற செய்தி என்ன என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்: துன்பத்தில் இருக்கின்ற மக்களை நிச்சயமாக விடுவிப்போம். மனம் தளராது இருங்கள். நிச்சயமாக உங்களை நாங்கள் விடுவிப்போம் என மிகுந்த உணவுடன் கூறியிருந்தார்.
அமெரிக்காவில் இருந்து வருகை தந்திருந்த எலின் சான்டர்ஸ் அவர்கள் (யூத இனத்தைச் சேர்ந்தவர். சுனாமி அனர்த்தத்தின் போது வன்னிப்பகுதிக்கு சென்று தமிழ் மக்களுக்கு உதவியவர்) தெரிவிக்கும் போது, நான் அங்கு இருக்கும் போது, அங்கு நான் “ஒரு நாட்டைக் கண்டேன்”. என்னுடைய மக்களுக்கு ஏற்பட்ட இன அழிப்பைப்போல், தமிழ் மக்களும் அழிக்கப்பட்டு, நாடும் அழிக்கப்பட்டு இருக்கின்ற இந்த நிலைமையில் உலகத் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று கூடி முயற்சி எடுங்கள் என்று கூறினார்.

அந்த வகையில், 80 லட்சத்திற்கும் அதிகமான உலகத் தமிழ் மக்கள் அனைவரும் ஒரு குடைக்குள் ஒன்று திரண்டு நாடற்ற தமிழ் மக்களுக்கு ஒரு நாட்டை உருவாக்கவேண்டிய காலமும் முக்கியத்துவமும் உள்ளது.

தமிழீழத்திலே இருக்கின்ற 33லட்சத்திற்கும் அதிகமான மக்களின் வாழ்வுரிமையை விலைபேசவோ, பங்குபோடவோ யாருக்கும் உரிமையில்லை. உலகத் தமிழ் மக்களே ஒரு குடையின் கீழ் ஒன்று திரண்டு ஒரே இலட்சியத்தில் பயணிப்போம். வாழ்வுரிமையை விலைபேசவோ, பங்குபோடவோ யாருக்கும் உரிமையில்லை. உலகத் தமிழ் மக்களே ஒரு குடையின் கீழ் ஒன்று திரண்டு ஒரே இலட்சியத்தில் பயணிப்போம்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.